வரும் 27ஆம் தேதி கங்கைகொண்ட சோழபுரம் வருகை தரும் பிரதமரின் ஹெலிகாப்டர் இறங்கு தளத்தைச் சீரமைக்கும் பணிகளை மத்திய குழுவினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் சோழப்பேரரசின் மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழா ஐந்து நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக விழாவின் கடைசி நாளான 27 -ஆம் தேதி பிரதமர் மோடி கங்கைகொண்ட சோழபுரம் வருகை தர உள்ளார்.
இதனையொட்டி பிரதமர் மோடி வரக்கூடிய ஹெலிகாப்டர் இறங்கும் தளத்தை, கங்கைகொண்ட சோழபுரத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் முன்னதாக குருபாலப்பர்கோயில் அருகே அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
வயல்வெளியில் அமைக்கப்படும் ஹெலிகாப்டர் இறங்கு தளத்திற்கான பணிகளை மத்திய குழுவினர், மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பாலசுப்பிரமணிய சாஸ்திரி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.