கோவையில் தொழிலாளர்கள் தங்கும் விடுதிக்கு அதிக வாடகை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் தங்கும் விடுதி திறக்கப்பட்டு 3 மாதங்கள் ஆகியும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது இது குறித்த விரிவான செய்தியை தற்போது காணலாம்.
புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகளவில் பணியாற்றும் கோவையில் அவர்கள் தங்குவதற்காகக் குறைந்த வாடகையில் தங்கும் விடுதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற கோரிக்கை தொழில்துறையினர் மத்தியில் நீண்டகாலமாக இருந்து வந்தது.
அதன் அடிப்படையில் கோவை சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் 23 கோடி ரூபாய் மதிப்பில் 1.49 ஏக்கர் பரப்பளவில் தொழிலாளர் தங்கும் விடுதி அண்மையில் கட்டி முடிக்கப்பட்டது. கட்டுவதற்கு முன்பாக 4 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணம் தற்போது 8 ஆயிரம் ரூபாயாக அதிகரித்திருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
500க்கும் அதிகமான தொழிலாளர்கள் தங்கும் வகையில் கட்டப்பட்ட இந்த தங்கும் விடுதியில் 111 அறைகள் அமைந்துள்ளன. தனி தொழிலாளர்கள் மற்றும் குடும்பத்துடன் தங்கும் தொழிலாளர்கள் என இருவகைகளில் அறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த விடுதி கட்டும் போதே குறைந்த பட்ச வாடகைக்கான ஒப்பந்தம் போடப்பட்டிருந்த நிலையில், கட்டி முடிக்கப்பட்ட பின்னர் வாடகை உயர்ந்திருப்பதால் தொழிலாளர்கள் இந்த விடுதியைத் தவிர்த்து வருகின்றனர்.
கட்டண உயர்வால் தொழிலாளர் தங்கும் விடுதி கட்டி முடிக்கப்பட்டு மூன்று மாதங்கள் கடந்த நிலையிலும், இன்னமும் திறக்கப்படாமலே உள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களுக்காகக் கட்டப்பட்ட விடுதிக்கான கட்டணத்தைக் குறைத்து அவர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.