ஒடிசாவில் வனத்துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பலரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.
கோராபுட் மாவட்டத்தில் உள்ள ஜெய்பூர் வனத்துறை அதிகாரியாக ராம சந்திர நேபாக் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகப் புகார் எழுந்தது.
இது தொடர்பாக அவருக்குச் சொந்தமான 6 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர். பல குழுவினர் இணைந்து நடத்திய இந்த சோதனையில், அடுக்குமாடி கட்டடம் ஒன்றில், கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து சுமார் ஒன்றரை கோடி ரூபாய் பணம், 4 கிலோ தங்க பிஸ்கட்கள் மற்றும் தலா 10 கிராம் எடை கொண்ட 16 தங்கக் காசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் அவருக்குச் சொந்தமான பூர்வீக வீடுகள் மற்றும் உறவினர் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.