1999ம் ஆண்டு “ஆபரேஷன் விஜய்” நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தானைத் தலைதெறிக்க விரட்டியடித்தது நெஞ்சுறுதிமிக்க இந்திய ராணுவப்படை. 25 ஆண்டுகளுக்கு முன்பு கார்கில் போரில் பெற்ற சரித்திர வெற்றியைக் கொண்டாடும் நாள் இன்று.
கடல் மட்டத்திலிருந்து 18 ஆயிரம் அடி உயரத்தில் கொடுமையான காலநிலை வாட்டிய நேரத்தில், குள்ளநரியாக நம் மண்ணில் ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவத்தைச் சம்மட்டி அடி கொடுத்து விரட்டியது நம் சிங்கப்படை.
1999ம் ஆண்டு மே 3ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்து கார்கில் மாவட்டத்திற்குள் மிகப்பெரிய திட்டத்துடன் ஊடுருவியது பாகிஸ்தான் படை… அப்போது பாகிஸ்தான் ராணுவ தளபதியாக இருந்த முஷாரப்பின் கண்காணிப்பில்தான் இந்த அத்துமீறலே அரங்கேறியது.
1999ம் ஆண்டு மே 5ம் தேதி ஆயிரக்கணக்கான பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், தீவிரவாதிகளுடன் கைகோர்த்து இந்தியாவின் கார்கில் பகுதியை ஆக்கிரமித்த செய்தி, நாடோடி மக்கள் மூலம் கிடைக்க, இந்திய ராணுவம் கிளர்ந்தெழுந்தது. பாகிஸ்தான் படைகளை விரட்டியடிக்க “ஆபரேஷன் விஜய்” நடவடிக்கையின் கீழ், தீரத்துடன் போரிட்டது.
கடுமையான குளிர், கரடு முரடான மலைப்பாதை போன்ற சவால்களை மன உறுதியுடன் எதிர்கொண்ட இந்திய ராணுவம், அங்குலம், அங்குலமாகத் தடைகளைத் தகர்த்தெறிந்து பாகிஸ்தான் ராணுவத்தைத் தெறிக்கவிட்டது.
இந்திய விமானப்படை மிக்-21, மிக்-27, எம்.ஐ-17 ஆகிய மூன்று போர் விமானங்களை இழந்தாலும் இழப்புகளைத் தாங்கிக்கொண்ட இந்திய ராணுவம் போரைத் தீவிரப்படுத்தியது. 1999 ஜூன் 9ஆம் தேதி படாலிக் பகுதியில் இரண்டு முக்கிய நிலைகளைக் கைப்பற்றிய இந்திய ராணுவம் கார்கிலில் மும்முனைத் தாக்குதலைத் தொடங்கியது.
11 மணி நேரத் தாக்குதலுக்குப் பின்னரும், கற்பனைக்கு எட்டாத மன உறுதியும், உடல் உறுதியும் கொண்ட இந்திய ராணுவம் டோலோலிங் மற்றும் டைகர் ஹில் பகுதியை மீட்டது.
உடலை உறைய வைக்கும் பூஜ்யம் டிகிரி வெப்பநிலை, செங்குத்தான பாறைகளைக் கொண்ட மலைப்பாதை, குறைவான ஆக்சிஜன், இடைவிடாத எதிரிகளின் தாக்குதல் என நீடித்த போர் உண்மையில் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத கடுமையான காலநிலையில் நடந்தது.
பாகிஸ்தான் கைப்பற்றிய கார்கில் மலைப்பகுதியை ஜூலை 26-ல் மீட்டு வெற்றிக்கொடி நாட்டியது இந்திய ராணுவம். கார்கில் போரில் 527 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பாகிஸ்தான் தரப்பில் 4000 பேர் மடிந்தனர்.
போரின்போது, கேப்டன் விக்ரம் பத்ரா கூறிய “யே தில் மாங்கே மோர்” என்ற வார்த்தை, இன்று வரை ஒவ்வொரு இந்தியனின் நெஞ்சிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
ஆபரேஷன் விஜய் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்ட ஜூலை 26ஆம் தேதியான இன்று, கார்கில் போரில், தாய் நாட்டிற்காகத் தீரத்துடன் போரிட்ட வீரர்களைக் கௌரவப்படுத்தும் விதமாக விஜய் திவாஸ் நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
இந்நாளில் இந்திய ராணுவத்தின் ஈடு இணையற்ற மன உறுதி, தியாகம் மற்றும் வீரத்தை என்றென்றும் போற்றி புகழ்பாடுவோம்.