தூத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட விமான நிலையத்தில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தப்படியாக பேருந்து, ரயில், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து கொண்ட நகரமாகத் தூத்துக்குடி திகழ்கிறது.
தூத்துக்குடியில் தொழில்துறை வளர்ச்சி அதிகரித்து வருவதாலும், பயணிகளின் தேவை காரணமாகவும் வாகை குளத்தில் உள்ள விமான நிலையத்தைப் புதுப்பிக்க வேண்டிய தேவை எழுந்தது.
அதன்படி, 381 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் விமான நிலையம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆயிரத்து 350 மீட்டாராக இருந்த ஓடுதளத்தின் நீளம், தற்போது, 3 ஆயிரத்து 115 மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், சென்னைக்கு அடுத்தபடியாக மிக நீண்ட ஓடுதளம் கொண்ட விமான நிலையமாகத் தூத்துக்குடி உருவெடுத்துள்ளது. மேலும், அங்கு சுமார் 227 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய முனையமும் அமைக்கப்பட்டுள்ளது.
17 ஆயிரத்து 341 சதுர மீட்டரில் அமைக்கப்பட்டுள்ள இந்த முனையத்தின் மூலம் அதிக விமானங்களைக் கையாள முடியும். இந்த முனையத்தில், கட்டுப்பாட்டுக் கோபுரம், விமான போக்குவரத்து கண்காணிப்பு, தீயணைப்பு கட்டடம் உள்ளிட்டவையும் கட்டப்பட்டுள்ளன.
இந்த முனையத்தின் விமான புறப்பாடு பகுதியில், 21 செக்-இன் கவுண்டர்களும், 4 வாயில்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தூத்துக்குடி – நெல்லை தேசிய நெடுஞ்சாலையிலிருந்து இந்த புதிய முனையத்திற்குச் செல்ல ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு இணைப்பு சாலையும் போடப்பட்டுள்ளது. இந்த புதிய முனையம் 4 ஸ்டார் அந்தஸ்து பெற்ற பசுமை கட்டடமாக அமைக்கப்பட்டுள்ளது.
விமானம் வரை பயணிகள் நடந்து செல்வதைத் தடுக்கும் வகையில், 3 aerobridge-கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 5 விருந்தினர் அறைகள், பெரிய உணவகம், மருந்தகம், ஸ்பா மையம், தாய்மார்கள் பாலூட்டும் அறை, சூர்ய சக்தி விளக்குகள், இலவச வைஃபை போன்ற பல்வேறு வசதிகளும் தூத்துக்குடி விமான நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த விமான நிலையத்தில் இனி ஒரே நேரத்தில் 5 விமானங்களை நிறுத்த முடியும். அதற்கு ஏற்றவாறு பிரத்யேக வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல, 500 பயணியர் வாகனங்களை நிறுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி விமான நிலையத்தில் இதுவரை பகல் நேரத்தில் மட்டுமே விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால், தற்போது இரவு நேரங்களிலும் விமானங்களை இயக்க முடியும். பெரிய ஏர் பஸ், போயிங் விமானங்கள் வந்து செல்லவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இப்படி பல்வேறு சிறப்பம்சங்களுடன் புதுப்பிக்கப்பட்டுள்ள விமான நிலையத்தின் மூலம் பயணிகள் இனி மிகவும் இலகுவாகப் பயணம் மேற்கொள்ள முடியும். தூத்துக்குடி மாநகரின் வளர்ச்சிக்கும் இந்த விமான நிலையம் முக்கிய மைல்கல்லாக இருக்கும்.