சென்னை கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை கோயம்பேடு அடுத்த நெற்குன்றம் பகுதி வள்ளியம்மன் நகர் பகுதியில் இரண்டு சாலைகளை இணைக்கும் 30 அடி சாலை ஒன்று கடந்த 50 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்துள்ளது. இன்றைய நிலவரப்படி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடத்தின் மதிப்பு சுமார்10 கோடி ரூபாய் இருக்கும் நிலையில், அந்த இடத்தை கமலேஷ் என்ற தனியார் முழுவதுமாக கூடாரம் அமைத்து வாகனங்களை நிறுத்தும் இடமாக பயன்படுத்தி வருகிறார்.
இந்த உண்மை யாருக்கும் தெரியாமல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தின் வெளிப்புறம் 6 மாதங்களுக்கு முன்னர் அரசு பொதுக்கழிப்பறை ஒன்று கட்ட முடிவு செய்தது. கழிப்பறை கட்ட திட்டமிட்டுள்ள இடம் தன்னுடையது என கமலேஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் 1969ஆம் ஆண்டு அரசு வரைபடத்தை ஆய்வு செய்த பார்த்தபோது கமலேஷ் அமைத்துள்ள கூடாரத்தில் மூன்று கிரவுண்ட் அரசிடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் மற்றும் கழிப்பறை அமைக்க போராட்டம் நடத்தி வந்த சென்னை மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் சத்தியநாதன் ஆகியோர் நில அளவீடு செய்ய கோரிக்கை வைத்திருந்தனர்.
அதன்படி இன்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை அரசு நில அளவீட்டாளர்கள் அளவீடு செய்தனர். இதில் மூன்று கிரவுண்ட் அரசிடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதும் அதன் மதிப்பு சுமார் 10 கோடி ரூபாய் என்பதும் தெரியவந்தது.
அப்போது அரசு வரைபடத்துடன் வந்த அதிமுக கவுன்சிலர் சத்தியநாதன் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை வரைபடம் கொண்டு விளக்கினார். அத்துடன் விரைவில் அந்த இடத்தை மீட்டு மக்களுக்கு எளிமையாக பயணிக்கும் வகையில் 30 சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.