தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பேரூராட்சியில் மொத்தம் உள்ள 18 வார்டுகளில் 29 கழிப்பறைகள் உள்ளன. இந்த கழிப்பறைகளில் விதிமுறைகளை மீறி கட்டணம் வசூலிக்கப்படுவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பேரூராட்சிக்குட்பட்டு மொத்தம் 18 வார்டுகள் உள்ள நிலையில் 18 வார்டுகளில் மொத்தம் 29 கழிப்பறைகள் உள்ளன இதில் இரண்டு கழிப்பறைகள் முறையாக டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில் மீதி 27 கழிப்பறைகள் இலவச கழிப்பறைகளாக மக்கள் பயன்பாட்டில் உள்ளன.
இதில் விதிமுறையை மீறி பணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.இது குறித்து புகார் வந்ததும் கடந்த 2019 ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் படி கேட்கப்பட்ட கேள்வியில் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.அதில் 18 வார்டுகளிலும் இலவச கழிப்பறைகள் செயல்பட வேண்டும்.
இலவச கழிப்பறைகள் என கழிப்பறைகளுக்கு முன்பு பெயர் பலகை வைக்கப்பட வேண்டும் என சட்ட விதிகளின்படி குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து அறிந்ததும் இலவச கழிப்பறைகளில் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுத்து நிறுத்தக்கோரி ஆண்டிபட்டி பேரூராட்சி நிர்வாகம் , பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகம், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் , தமிழக முதல்வர் என அனைவரிடம் புகார் கொடுத்தும் நான்கு ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் மீண்டும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இந்த ஆண்டு கேள்வி கேட்கப்பட்டபோது அந்த கழிப்பறைகளில் தனிநபர்கள் கட்டணம் வசூலித்து வந்ததை மாற்றி தற்போது புதிய உத்தியாக மகளிர் சுயஉதவி குழுக்கள் என்ற பெயரில் இலவச கழிப்பறைகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
பேரூராட்சி நிர்வாகத்தின் உதவியுடன் உள்ளூர் அரசியல் கட்சி பிரமுகர்கள் இந்த கழிப்பறைகளை நிர்வகித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் உள்கமிஷன் வைத்து இதற்கான ஏற்பாட்டை செய்து ஏழை எளிய மக்களிடம் இலவச கழிப்பறைகளுக்கு 5 ரூபாய் 10 ரூபாய் என கட்டணம் வசூலித்து சுயலாபம் அடைந்து வருகின்றனர்.இதை தடுத்து நிறுத்தி இலவச கழிப்பறைகளுக்கு முன்பு இலவச கழிப்பறை என பெயர் பலகை வைக்க வேண்டும்.
இலவச கழிப்பறைகளை கட்டண கழிப்பறைகளாக மாற்றியதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பாஜக நிர்வாகி ராஜா உள்ளிட்ட கட்சியினர் ஆண்டிப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர்.இலவச கழிப்பறைகளை பேரூராட்சி நிர்வாகமே எடுத்து நடத்த வேண்டும் என்றும் இல்லாவிட்டால் மக்களை ஒன்று திரட்டி விரைவில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.