தூத்துக்குடி விமான நிலைய புதிய முனைய கட்டடம் உட்பட 4 ஆயிரத்து 900 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
மாலத்தீவு சென்றிருந்த பிரதமர் மோடி, தனது பயணத்தை நிறைவு செய்துவிட்டு 2 நாட்கள் பயணமாக தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார். தமிழர்களின் பாரம்பரிய உடையில் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்த அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் ராம் மோகன் நாயுடு, எல்.முருகன், தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து விழா மேடைக்கு சென்ற பிரதமர் மோடிக்கு, வள்ளுவர் கோட்டத்தின் மாதிரி நினைவுப் பரிசை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கி கெளரவித்தார்.
தொடர்ந்து தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனைய கட்டடம் உட்பட 4 ஆயிரத்து 900 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். சோழபுரம் முதல் சேத்தியாத்தோப்பு வரை அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலையை திறந்து வைத்த பிரதமர், மதுரை- போடிநாயக்கனூர் இடையே மின்மயமாக்கப்பட்டுள்ள ரயில் வழித்தடத்தையும் தொடங்கி வைத்தார்.
அதேபோல், நாகர்கோவில் டவுன் – நாகர்கோவில் சந்திப்பு – கன்னியாகுமரி இடையிலான இரட்டை ரயில் பாதையையும், ஆரல்வாய்மொழி- நாகர்கோவில் சந்திப்பு மற்றும் நெல்லை மேலப்பாளையம் இடையிலான இரட்டை ரயில் பாதையையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
தொடர்ந்து விமான நிலையத்தின் புதிய முனைய கட்டடத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார். அப்போது முனைய கட்டத்தின் சிறப்பம்சங்கள் குறித்து விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு எடுத்துரைத்தார்..