கனமழை காரணமாக மூணாறு பகுதியில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
கேரளா மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்துவரும் நிலையில், இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியில் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மூணாறு தேசிய நெடுஞ்சாலையில் கண்ணன் தேவன் தோட்டத்தின் அலுவலகம் அருகே சாலையோரத்தில் உள்ள நான்கு கடைகள் நிலச்சரிவில் சிக்கி சேதமடைந்தன. கடைகள் காலியாக இருந்ததால் பெரும் உயிர்தேசம் தவிர்க்கப்பட்டது.
மண்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன. இடுக்கி மாவட்டத்தில் கனமழை தொடர்வதால் பேரிடர் மீட்புக்குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மூணார் – கேப் சாலையில் இரவு நேர போக்குவரத்துக்கு மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ள நிலையில், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, இடுக்கி மாவட்டம் தேவிகுளத்தில் இருந்து மூணாறு நோக்கி சென்று கொண்டிருந்த லாரி மண்சரிவில் சிக்கி விபத்துக்குள்ளானது. பழைய அரசு கல்லூரி அருகே மண்சரிவில் சிக்கிய லாரி ஓட்டுநர் கணேசன் என்பவரை பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருவத்தவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், மூணாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் பயணம் மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.