முன்னாள் குடியரசுத் தலைவ;u ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில் மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக எல்.முருகன் விடுத்துள்ள பதிவில், இந்தியாவின் ஏவுகணை நாயகரும், முன்னாள் குடியரசுத் தலைவருமான டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் அவர்களது நினைவு தினம் இன்று. தேசத்தின் வளர்ச்சி இளைஞர்களது கையில் என்பதை தீர்க்கமாக நம்பியவர்,
தனது பேச்சுக்களின் மூலமாக இளைய சமுதாயத்தை வெகுவாக கவர்ந்தார். ‘பொக்ரான்’ அணு ஆயுத சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டியதன் மூலம், உலக அரங்கில் இந்தியாவின் மீதான பார்வையை பன்மடங்கு உயர்த்திக் காட்டினார்.
அய்யா, டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் அவர்களது நினைவு தினத்தில், தேசத்திற்கு அவராற்றிய அறிவியல் பணிகளை நம் இளைய சமுதாயத்திற்கு எடுத்துக் காட்டுவோம்; அய்யாவின் நினைவுகளை என்றென்றும் போற்றுவோம் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை விடுத்துள்ள பதிவில், முன்னாள் குடியரசுத் தலைவரும், பாரதத்தின் பெருமைக்குரிய மைந்தருமான, பாரத ரத்னா, டாக்டர் அப்துல் கலாம் அவர்களது நினைவு தினம் இன்று. எளிய குடும்பப் பின்னணியிலிருந்து வந்து, இந்தியாவின் குடியரசுத் தலைவராக உயர்ந்தவர். தன் வாழ்நாள் முழுவதையும், நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், மாணவர்கள் கல்வி அறிவையும், தன்னம்பிக்கையை ஊக்குவிப்பதிலும் செலவிட்டவர். மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் என்றும் ஒரு வழிகாட்டியாகத் திகழும் ஏவுகணை நாயகன் ஐயா கலாம் அவர்கள் புகழைப் போற்றி வணங்குகிறோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள பதிவில், “கனவு காணுங்கள்” என்று அனைத்து இந்திய மாணவர்களையும் இளைஞர்களையும் ஊக்கப்படுத்திய, இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினம் இன்று. இன்று உலக அரங்கில் தவிர்க்க முடியாத சக்தியாக இந்தியா உருவெடுக்க முக்கிய காரணங்களில் ஒருவராகத் திகழ்பவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்கள். வல்லரசு நாடுகள், தங்களிடம் அணுகுண்டு வைத்துக் கொண்டு உலகை அச்சுறுத்தியபோது, இந்தியாவாலும் அணுகுண்டு உருவாக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர்.
இன்று நம்மிடம் இருக்கும் ஏவுகணை தொழில்நுட்பங்களுக்கெல்லாம் விதை போட்டு, அதை மரமாக வளர்த்துக் கொடுத்தவரும் நமது அப்துல் கலாம் அவர்கள்தான். இன்றைய நாளில், அவர் செய்த சாதனைகளை நினைவுகூர்ந்து, அவரது பெருமையைப் போற்றுவோம் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.