பாகிஸ்தான், சீனாவுடன் சேர்ந்து பகைத்தபோதும், மனிதாபிமான அடிப்படையில் வங்கதேசத்திற்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது இந்தியா… வங்கதேச விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் வெடித்துச் சிதறியதில் பலத்த தீக்காயமடைந்தவர்கள் குணமடைய இந்திய மருத்துவக் குழு இரவு பகலாக போராடி வருகிறது.
இடியாக காதை கிழித்த சத்தம்… அலறி துடித்த மாணவர்கள்.. தீயில் கருகிய உடல்கள்…. வங்கதேசத்தில் போர் விமானம் ஒன்று பள்ளி கட்டடத்தில் விழுந்து நொறுங்கிய கோரக் காட்சிகள் தான் இவை..
கடந்த 21ம் தேதி வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள பள்ளி வளாகத்தில் விமானப்படைக்கு சொந்தமான F-7 BGI என்ற பயிற்சி விமானம் திடீரென விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் தீக்காயம் அடைந்துள்ள நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
வங்கதேச வரலாற்றிலேயே மிக கோர விபத்தாகக் கருதப்படுகிறது.இந்நிலையில், சாத்தியமான அனைத்து ஆதரவையும், உதவியையும் வழங்க இந்தியா தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். அதனை மெய்ப்பிக்கும் விதமாக,விமான விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க இந்தியாவில் இருந்து தீக்காய சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்கள் குழு வங்கதேசத்திற்கு விரைந்தது.
தீக்காயமடைந்தவர்களுக்கு சிகிச்சைக்கான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.
நோயாளிகளின் நிலையை மதிப்பீடு செய்து தேவைப்பட்டால் இந்தியாவில் சிறப்பு சிகிச்சைக்கான பரிந்துரை செய்யவும் மருத்துவக் குழு திட்டமிட்டுள்ளது. இந்தியா மட்டுமல்லாமல், சிங்கப்பூர், சீனாவைச் சேர்ந்த மருத்துவக்குழுவினரும் தீக்காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்
அண்மைக்காலமாக சீனா, பாகிஸ்தானுடன் சேர்ந்து இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் வங்கதேசத்தில் இடைக்கால அரசு ஈடுபட்டு வருகிறது. வங்கதேசம் பகையை காட்டும்போதும், இந்தியா மனிதாபிமானத்தோடு மருத்துவ உதவி செய்து வருவது உலக நாடுகளின் கவனம் பெற்றுள்ளது.