சோழ சாம்ராஜ்ஜியத்தின் காலகட்டம் பாரதத்தின் பொற்காலம் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, வணக்கம் சோழ மண்டலம் என கூறியதுடன், நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க எனும் வரிகளை மேற்கோள் காட்டி தனது உரையை தொடங்கினார்.
பின்னர் பேசிய பிரதமர் மோடி, கங்கைகொண்ட சோழபுரத்தில் சோழீசுவரரை வழிபட்டது பெரும் பாக்கியம் என கூறினார். மக்கள் அனைவருக்கும் இறைவன் ஆசி கிடைக்க வேண்டும் என வழிபட்டதாக பேசிய பிரதமர் மோடி, இளையராஜாவின் இசை, ஓதுவார்களின் மந்திரங்கள் தன்னை மெய்மறக்க செய்தன எனவும் தெரிவித்தார்.
மேலும், கங்கைகொண்ட சோழபுரம் குறித்த கண்காட்சியை அனைவரும் பார்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இதனை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, சிவபக்தி கொண்டவர்களின் பெருமை சிவனைப் போல் என்றும் அழியாதது என தெரிவித்தார். ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனின் பெயர்கள் தேசத்தின் அடையாளங்கள் என கூறிய பிரதமர் மோடி, பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மக்களாட்சியை நடத்தியவர்கள் சோழர்கள் எனவும் தெரிவித்தார்.
அதே போல பொக்கிஷங்களை தவிர்த்து கங்கைநீரை கொண்டு வந்தவர் ராஜேந்திர சோழன் என கூறிய பிரதமர் மோடி, இலங்கை, மாலத்தீவு, தென்கிழக்கு ஆசியா வரை சோழ அரசு நீண்டிருந்தது எனவும் கூறினார். மேலும், சோழர்கள் கால கலை பெருமிதத்தில் ஆழ்த்துகிறது எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
கங்கைகொண்ட சோழபுரம் கோயில் கட்டடவியல் அற்புதம் என புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி, சைவ பாரம்பரியத்தில் தமிழகம் முதன்மையாக திகழ சோழர்களே காரணம் எனவும் தெரிவித்தார். திருமூலரின் அன்பே சிவம் கோட்பாட்டை கடைபிடித்தால் உலகில் வன்முறை இருக்காது என தெரிவித்த பிரதமர், திருமூலரின் வழியில்தான் இன்றைய இந்தியா பயணித்து வருகிறது எனவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, 2014க்கு பிறகு 600-க்கும் அதிகமான கலை படைப்புகளை மீட்டுள்ளதாகவும், அதில் 36 கலைப் பொருட்கள் தமிழகத்தைச் சேர்ந்தவை எனவும் தெரிவித்தார். மேலும், ராஜேந்திர சோழன் காலத்தில் கடற்படை வலிமை பெற்றதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க அனைவரும் ஒற்றுமையை பேண வேண்டும் என வலியுறுத்திய பிரதமர் மோடி, பாரதத்தின் வலிமையை ஆப்ரேஷன் சிந்தூர் உலகிற்கு பறைசாற்றியது எனவும் தெரிவித்தார்.
இந்தியாவை தாக்கினால் எப்படிப்பட்ட பதிலடி கிடைக்கும் என உணர்த்தியதாகவும் அவர் கூறினார். மேலும், தமிழகத்தில் ராஜேந்திர சோழனின் பிரமாண்ட சிலையை நிறுவுவோம் எனவும் பிரதமர் மோடி உறுதியளித்தார்.