மாமன்னன் முதலாம் ராஜேந்திர சோழன் உருவம் பொறித்த நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.
அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் வளாகத்தில் முதலாம் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மத்திய கலாசாரத் துறை சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். முன்னதாக விழா மேடைக்கு வந்த பிரதமர் மோடிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தஞ்சாவூர் ஓவியத்தை பரிசளித்தார்.
அதைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு பிரதமர் மோடிக்கு நினைவு பரிசை வழங்கினார்.பின்னர் விழா மேடையில் ஓதுவார்கள் சிறப்பு பாராயணத்தை அரங்கேற்றினர். அதனை பிரதமர் மோடி மெய்மறந்து ரசித்தார்.
தொடர்ந்து விழா மேடையில் பிரதமரை வரவேற்கும் விதமாக இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது இளையராஜாவின் இசைக் குழுவினர் அவர் இசையமைத்த ஓம் சிவோஹம் பாடலை மேடையில் பாடி அசத்தினர். அதனை மனமுருகி கேட்ட பிரதமர் மோடி எழுந்து நின்று கைதட்டி இசைக்குழுவினரை பாராட்டினார்.
பின்னர் விழாவின் முக்கிய நிகழ்வான மாமன்னன் முதலாம் ராஜேந்திர சோழன் உருவம் பொறித்த நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.அதைத் தொடர்ந்து திருவாசகத்தின் தொகுப்பையும், இளையராஜாவின் இசையில் உருவான ஸ்ரீமத் பகவத் கீதையின் தமிழ் பதிப்பையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.