சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து ஒரு லட்சம் கன அடியாக நீர் வெளியேற்றப்படுவதால் காவேரி கரையோர மக்களுக்கு வருவாய்த் துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த வெள்ளிக்கிழமை 4-வது முறையாக 120 அடியை எட்டியது. இதனை அடுத்து அணைக்கு வரும் நீர் முழுவதும் அப்படியே காவிரி ஆற்றி வெளியேற்றப்பட்டு வந்தது. ஞாயிற்றுக்கிழமை மதியம் 75 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் ஒரு லட்சம் கன அடியாக உயர்ந்துள்ளது.
இதனால் காவேரி கரையோர பகுதிகளான சேலம் கேம்ப், அண்ணா நகர், பெரியார் நகர், சங்கிலி முனியப்பன் கோவில், ரெட்டியூர் கோல்நாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதற்கிடையில் சங்கிலி முனியப்பன் கோயில் பகுதியில் விளை நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.