இஸ்ரோ – நாசா இணைந்து உருவாக்கிய நிசார் செயற்கைக்கோளின் சிறப்பு அம்சங்களை தற்போது காணலாம்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இணைந்து புவியின் மேற்பரப்பு மாற்றங்களைக் கண்காணிப்பதற்காக நிசார் என்ற செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த முடிவு செய்துள்ளன
இஸ்ரோ – நாசா இணைந்து 12 ஆயிரத்து 750 கோடி ரூபாய் செலவில் உருவாக்கியுள்ள ‘நிசார்’ செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி எப்-16 ராக்கெட் மூலமாக ஸ்ரீஹரிகேட்டாவில் இருந்து ஜூலை 30ஆம் தேதி மாலை 5.40 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.
இஸ்ரோ, நாசா இணைந்து தயாரித்துள்ள நிசார் செயற்கைக்கோளில் 2 முக்கிய ரேடார் தொழில்நுட்பங்கள் உள்ளன. இவை இரண்டும் இணைந்து பூமியின் மேற்பரப்பை மிக விரிவாகவும், நுணுக்கத்துடன் படம் பிடித்து அனுப்பும் எனக் கூறப்பட்டுள்ளது.
12 நாளுக்கு ஒருமுறை மொத்த பூமியையும் அங்குலம் அங்குலமாக நிசார் செயற்கைக்கோள் படம் பிடித்து அனுப்பும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பனிக்கட்டிகள் எவ்வாறு உருகுகின்றன, நிலச்சரிவுகள் எங்கு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை முன்கூட்டியே நிசார் செயற்கைக்கோள் கண்காணிக்கும் என்றும்,
வனப்பகுதிகள், பயிர் நிலங்களில் ஏற்படும் மாறுதல்கள், நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகள் ஆகியவை குறித்து நிசார் செயற்கைக்கோள் ஆராயும் எனவும் கூறப்பட்டுள்ளது.
பூமியில் நிகழும் இயற்கை மாற்றங்களை ஆராய்வதே நிசார் செயற்கைக்கோள் திட்டத்தின் முக்கிய நோக்கம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
low earth orbiter என்று சொல்லப்படக்கூடிய தாழ்வான பூமி வளையத்தில் 747 கிலோ மீட்டர் தொலைவில் சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும் நிசார் செயற்கைக்கோளின் ஆய்வு சுமார் 5 ஆண்டுகள் வரை இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.