ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஆப்ரேஷன் சிந்தூர் விவகாரம் தொடர்பாக மக்களவையில் விளக்கமளித்துப் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய ராணுவத்தின் வீரச் செயலுக்குத் தலை வணங்குவதாகத் தெரிவித்தார்.
தீவிரவாத முகாம்கள் மட்டுமே அழிக்கப்பட வேண்டும், பாகிஸ்தான் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதில் உறுதியாக இருந்ததாகக் கூறிய அவர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கிய 9 தீவிரவாத முகாம்கள் 22 நிமிடங்களில் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
தொழில்நுட்ப ரீதியாகவும், ராணுவ பலம் ரீதியாகவும் இந்தியாவின் வல்லமையை ஆப்ரேஷன் சிந்தூர் உலகிற்குப் பறைசாற்றியதாகக் கூறிய அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியாவின் வலிமையான வான் தடுப்பு அமைப்புகள் மூலம் பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சி முற்றிலுமாக முறியடிக்கப்பட்டது என்றார்.
மே 10ம் தேதி பாகிஸ்தான் விமானப்படைத் தளத்தை இந்திய ராணுவம் தகர்த்ததை அடுத்து பாகிஸ்தான் தோல்வியை ஒப்புக் கொண்டதாகவும், போரை நிறுத்தும்படி முதலில் கோரிக்கை விடுத்து பாகிஸ்தான் இந்தியாவிடம் மன்றாடியதாகவும் அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இந்திய ராணுவத்தின் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர், உண்மையான எண்ணிக்கை இதை விட அதிகமாக இருக்கலாம் என்று கூறிய ராஜ்நாத், ஆப்ரேஷன் சிந்தூரின் நோக்கம் நிறைவேறியதால் சண்டை நிறுத்தப்பட்டதாக மக்களவையில் தெரிவித்தார்.