இந்தியாவின் வளர்ச்சியடைந்த நகரங்களில் ஒன்றாக அறியப்படும் குருகிராம் துர்நாற்றம் வீசும் குப்பை நகரமாகவே மாறிவிட்டது. வாழ்வாதாரத்திற்காக வந்த தொழிலாளர்கள் கூட்டம், கூட்டமாக வெளியேறி வரும் நிலையில், தன்னிலையை இழந்து தவிக்கிறது இந்நகரம்.
ஓங்கி உயர்ந்த கட்டடங்கள், வசதியான அடுக்குமாடிக் குடியிருப்புகள், தொழில்நுட்ப பூங்காக்கள், நவீன போக்குவரத்து வசதிகள் என அடுத்த சிங்கப்பூராகவே பார்க்கப்பட்டதுதான் இந்தியாவின் Cyber Hub-ஆன குருகிராம்.
ஆனால் தற்போதோ அதன் நிலைமையே வேறு, எப்படியிருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்ற காமெடிக்கு பொருந்திப் போய்விட்டது , இந்த நகரம். மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகளாலும், துர்நாற்றம் வீசும் சாலைகளாலும் நிரம்பியுள்ள குருகிராம் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. குறிப்பாக அங்குள்ள Ardee city கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.
இந்தியாவில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள வெளிநாட்டினரை வெளியேற்ற மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியேற்ற தடுப்பு சட்டம் இங்கு மிக தீவிரமாக அமல்படுத்தப்பட்டதே இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. குருகிராம் பகுதிகளில் சுகாதார பணிகளில் ஈடுபடும் பெரும்பாலானோர் பெங்காலி மொழி பேசுபவர்கள் தான்… வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறுபவர்களும் பெங்காலி மொழியையே பேசுவதால், வெளிநாட்டினர் எனக் கருதி போலீசார் அழைத்துச் சென்றுவிடுகிறார்கள் என்பது பொதுவான குற்றச்சாட்டாக உள்ளது.
உரிய ஆவணங்கள் இருந்தாலும், போலீசாரின் நடவடிக்கைக்கு பயந்து, குருகிராமிற்கு வாழ்வாதாரத்திற்காக வந்த தொழிலாளர்கள் பலர் குடும்ப குடும்பமாக சொந்த ஊருக்கே திரும்பி வருகின்றனர். சுகாதார பணிகளில் இருந்த பல தொழிலாளர்கள் வெளியேறியதன் காரணமாக, குருகிராம் சுகாதார சீர்கேட்டில் சிக்கியுள்ளது.
குப்பைகளை அகற்றும் பணி முடங்கியதால், குடியிருப்பு பகுதிகள், சாலைகள் என எங்கெங்கும் மலைபோல் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் வாழ்வதற்கே தகுதியற்ற நகரமாக குருகிராம் மாறி வருவதாக இணையவாசிகள் பலரும் தங்களது ஆதங்கத்தைப் பதிவிட்டு வருகின்றனர்.
எனினும், வங்கதேசத்தவர் இல்லை என ஆதாரங்களுடன் நிரூபித்தால், யாரையும் தாங்கள் எந்த விதத்திலும் துன்புறுத்துவதில்லை என்றும், உரிய ஆய்வு நடத்திய பிறகு, அவர்களைத் தொடர்ந்து இங்கேயே தங்க அனுமதிப்பதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
நாளுக்கு நாள் குப்பைகள் மலைபோல் சேர்ந்து வரும் நிலையில், அவற்றை அகற்ற அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே குருகிராம் வாசிகளின் கோரிக்கை.