போர் விமானங்களிலிருந்து ஏவக்கூடிய புதிய ஹைப்பர் சோனிக் வகை ஏவுகணையை பரிசோதித்து உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது சீனா. குறிப்பாக அமெரிக்காவின் 5ம் தலைமுறை போர் விமானங்கள், பி-21 பாம்பர் விமானங்களைத் தாக்கக் கூடிய திறன் பெற்ற இந்த ஏவுகணை இந்தியாவுக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச நாடுகள் தங்களது ஹைப்பர்சோனிக் ஆயுதங்களின் வேகம், தாக்கத்தை அதிகரிக்கப் போட்டிப்போட்டு வருகின்றன. அதிநவீன ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள், ஜெட் விமானங்களை உருவாக்கும் முயற்சியிலும் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்நிலையில், சீனா ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை தாக்கிய அழிக்கக் கூடிய hypersonic air-to-air missile ஒன்றைப் பரிசோதித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஒலியின் வேகத்தைக் காட்டிலும் 5 மடங்கு வேகமாகச் செல்லும் இந்த ஏவுகணை, எதிரி விமானங்களுக்கு ரேடார் சிக்னல் கிடைக்கும் முன்பே தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை….
மேலும் இந்த ஏவுகணை 5ம் தலைமுறை போர் விமானங்கள், வேவு பார்க்கப் பயன்படுத்தப்படும் உளவு விமானங்களையும் தாக்கி அழிக்கும் திறன் பெற்றவை என்று கூறப்படுகிறது. “Beyond Visual Range” வகையைச் சேர்ந்த சீனாவின் ஹைப்பர் சோனிக் ஏவுகணை, விமானி இலக்கை பார்க்காமலேயே ரோடார் அல்லது பிற சென்சார் மூலம் இலக்கை தாக்கும் திறன் கொண்டது என்பதால், எதிர்கால போர் தந்திரங்களின் மிக முக்கியத்துவம் பெறும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக அமெரிக்காவின் F22,F35 ரக அதிநவீன விமானங்கள், ஈரானில் அணு ஆயுத தளங்கள் மீது குண்டுவீசிய அமெரிக்காவின் B-21 Raider விமானங்களை எளிதாக அழிக்கும் வல்லமை கொண்டவையாக பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் AIM-174B, ரஷ்யாவின் R-37M ஏவுகணைகள் 400 கிலோ மீட்டர் தூர இலக்கை தாக்கும் திறனுடன் உள்ள நிலையில், சீனாவின் புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை பயன்பாட்டுக்கு வரும்பட்சத்தில், அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், தைவான் போன்ற நாடுகள் தங்களது பாதுகாப்பு தந்திரங்களை மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டிய நிலை ஏற்படும்.
இந்தியா தற்போது Astra Mk-1, Mk-2, Mk-3 ஏவுகணைகளை அதிநவீனப்படுத்தி வரும் நிலையில், நவீன போர்யுகத்தில் சீனாவின் ஹைப்பர் சோனிக் ஏவுகணை கடும் சவாலை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வகை ஏவுகணை, எதிரி விமானங்களை கூடுதல் பாதுகாப்புடன் இருந்தாலும், மிகவும் தூரத்தில் இருந்தே அழிக்கும் திறன் கொண்டவை இருப்பதால், இதன் தாக்கம் எதிர்கால விமானப் போர்களை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கக்கூடும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். எனினும் சீனாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதா? என்பது பற்றி அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.