திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் காதல் விவகாரத்தில் ஐடி ஊழியர் கொல்லப்பட்ட நிலையில், அவர் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே கொலை செய்ததாகக் கைதான இளைஞர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கவின்குமார் என்பவர், சென்னையில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் விடுமுறைக்காக ஊருக்கு வந்த கவின்குமார், ஞாயிற்றுக்கிழமையன்று பாளையங்கோட்டையில் உள்ள சித்த மருத்துவமனைக்குத் தனது தாத்தாவை அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது கவின்குமாரை வெட்டிக் கொன்றுவிட்டு இளைஞர் ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்றார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சுர்ஜித் என்பவரை கைது செய்தனர். இதனையடுத்து காதல் விவகாரத்தாலேயே கவின்குமார் கொலை செய்யப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது.
இந்நிலையில் கொலையாளி சுர்ஜித்தை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த கவின்குமார், சித்த மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த தனது அக்காவுடன் பழகுவது பிடிக்காததால், அவரை வெட்டிக் கொன்றதாக சுர்ஜித் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
இதனிடையே ஐடி ஊழியர் கொலை சம்பவம் தொடர்பாகக் காவல் உதவி ஆய்வாளர்களாக பணிபுரிந்து வரும் சுர்ஜித்தின் பெற்றோர் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.