காடுகளின் காவலன் என அழைக்கப்படும் புலிகளைப் பாதுகாக்கும் நோக்கில் அனுசரிக்கப்படும் சர்வதேச புலிகள் தினம் இன்று. வனவளத்திற்கும், பல்லுயிர் பெருக்கத்திற்கும் உதவும் புலிகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
உலகளவில் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதைத் தொடர்ந்து அவற்றைப் பாதுகாக்கும் நோக்கில் ஆண்டுதோறும் ஜூலை 29 ஆம் தேதி சர்வதேச புலிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
புலிகளின் எண்ணிகையை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதைத் தடுக்க, சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கோரிக்கையின் அடிப்படையில் இந்தியாவில் பல்வேறு இடங்களில் புலிகள் காப்பகங்கள் தொடங்கப்பட்டன.
இந்தியாவில் மொத்தமாக உள்ள 48 புலிகள் காப்பகங்களில் தமிழகத்தில் மட்டும் சத்தியமங்கலம், களக்காடு முண்டந்துரை, முதுமலை மற்றும் ஆனைமலை ஆகிய நான்கு இடங்களில் புலிகள் காப்பகங்கள் இயங்கி வருகின்றன.
முதுமலை புலிகள் காப்பகத்தில் 162 புலிகளும், மற்ற மூன்று புலிகள் காப்பகத்தில் 192 புலிகளும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது தவிர்த்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் 250 புலிகள் நடமாடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
புலிகளுக்குத் தேவையான உணவு, குடிநீர், வாழ்விடம் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் முறையாக ஏற்படுத்தித் தருவதால் புலிகளின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாகக் கணிசமாக உயர்ந்து தெரிவிக்கும் வன ஆர்வலர்கள், புலிகள் காப்பகத்தின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.
வனப்பகுதிகளில் மனித நடமாட்டம் அதிகரித்தல், வனங்கள் சுருங்குதல் ஆகியவை குடியிருப்பு பகுதிகளுக்குள் புலிகள் நுழைய முக்கிய காரணங்களாக அமைந்திருக்கின்றன. ஊருக்குள் வரும் புலிகள் கால்நடைகளோடு மனிதர்களைத் தாக்கும் சம்பவங்களும் தொடர்கதையாகி வருகின்றன.
நாளுக்கு நாள் வனப்பகுதிகள் சுருங்கி வரும் நிலையில் வசிப்பிடங்களின்றி புலிகள் பல்வேறு நெருக்கடியை எதிர்கொள்வதே இத்தகைய மோதலுக்கு முக்கிய காரணம் எனவும் ஆய்வுகள் கூறுகின்றன.
புலிகளைப் பாதுகாப்பதன் மூலம் வனவளத்தைப் பெருக்க முடியும் என்பதோடு, பல்லுயிர் பெருக்கத்திற்கும் உதவும் என்பதால் அவற்றை பாதுக்காக்க வேண்டியதும், அது குறித்து போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.