பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மலையோர மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால் நீர்நிலைகள் கிடுகிடுவென உயர்ந்து வருகின்றன.
48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 42.09 அடியை எட்டியதால், அணைக்கு வரும் 569 கன அடி நீர் முழுவதும் தாமிரபரணி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக, குழித்துறை பகுதியில் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதேபோல, பெருஞ்சாணி அணைக்கு வரும் 393 கன அடி நீரும் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளதால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.