ஏமனில் செவிலியர் நிமிஷாவுக்கு மரண தண்டனை நிறுத்தப்பட்டதாக வெளியான செய்திகளை, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது.
கேரளாவின் பாலக்காட்டை சேர்ந்த நிமிஷா பிரியா என்பவர், கடந்த 2008-ம் ஆண்டு ஏமன் தலைநகர் சனாவில் உள்ள அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியில் சேர்ந்தார்.
கடந்த 2015-ல் அரசு செவிலியர் பணியை ராஜினாமா செய்த நிமிஷா, ஏமனை சேர்ந்த ஜவுளி வியாபாரி தலால் அய்டோ மெஹ்தியுடன் இணைந்து அங்கு புதிய மருத்துவமனையை தொடங்கினார். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு நிமிஷா மயக்க ஊசி மருந்தை செலுத்தியதில் மெஹ்தி உயிரிழந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சனா நகர நீதிமன்றம் கடந்த 2020-ல் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதித்தது. இதையடுத்து ஜூலை 16-ம் தேதி நிமிஷாவுக்கு நிறைவேற்றப்படவிருந்த மரண தண்டனை மத்திய அரசின் தலையீடால் தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் ஏமன் நாட்டில் கேரள மாநில செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகின.
இதனைக் கேரளாவின் இஸ்லாமிய மதத் தலைவர் அபுபக்கர் முஸ்லியாரின் ‘கிராண்ட் முப்தி’ அலுவலகம் உறுதிப்படுத்தியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இந்த செய்தியை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது.