அமெரிக்காவின் நியூயார்க்கில் 44 மாடிகள் கொண்ட அலுவலக கட்டடத்தில் நுழைந்து 5 பேரை சுட்டுக்கொன்ற கொடூரன் ஷேன் தமுரா பற்றிய பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கிச்சூடு பற்றி போலீசார் துப்பு துலக்கி வரும் நிலையில், ஷேன் தமுரா யார் என்பது பற்றி தற்போது பார்க்கலாம்.
நீல நிற கோட் சூட்டில் ஹாலிவுட் வில்லன் போன்ற தோற்றம்…. கையில் அதிநவீன AR-15 assault rifle…. என நியூயார்க்கைத் தெறிக்கவிட்ட இவர் பெயர்தான் ஷேன் தமுரா. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பரபரப்பான மிட் டவுன் மன்ஹட்டான் பகுதியில் உள்ள 345 பாரக் அவென்யூவில்தான் அந்த கொடூர சம்பவம் நடந்தது. அயர்லாந்து தூதரகம், நேஷனல் ஃபுட்பால் லீக் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் இயங்கும் 44 மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டடத்தில் அதிரடியாக நுழைந்தார் ஷேன் தமுரா.
முதல் தளத்தில் வில்லன் போன்று நுழைந்த ஷேன் தமுரா, அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைய, போலீஸ் அதிகாரி உள்பட 5 பேர் ரத்தவெள்ளத்தில் பிணமாயினர். முதல் தளத்தில் துப்பாக்கிச்சூடு நடந்ததை உணர்ந்த சில பணியாளர்கள் தங்கள் அலுவலகத்தின் கதவுகளை மூடி, ஷோபாக்களையும், பர்னிச்சர்களையும் கொண்டு தற்காப்பு சுவரை அமைத்துப் பதுங்கிக் கொண்டனர்.
இதனிடையே துப்பாக்கிச்சூடு சம்பவம் காட்டுத்தீயாய் பரவ, நியூயார்க் நகரம் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டது. துப்பாக்கிகளுடன் நுழைந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஒவ்வொரு தளமாகச் சல்லடை போட்டுத் தேடிய போலீசார், 33வது தளத்தில் ஷேன் தமுராவை சடலமாக மீட்டனர். அவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் தற்கொலை செய்து கொண்டார் என்பது போலீசாரின் ரிப்போர்ட்.
துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்துத் துப்பு துலக்கிய காவல்துறைக்குப் பல திடுக்கிடும் தகவல் கிடைத்தது. 27 வயதுடைய ஷேன் தமுரா, ஹவாய் பகுதியில் பிறந்து வேகாஸ் பகுதிக்குக் குடிபெயர்ந்தவர் என்பது தெரியவந்தது. தனியார் நிறுவனத்தில் துப்பறிவாளனாக பணியாற்றிய ஷேன் தமுரா, ஆயுதங்களை மறைத்து எடுத்துச் செல்ல அனுமதி பெற்றிருந்தது விசாரணையில் தெரியவந்தது.
தாக்குதல் நடந்த அன்று குண்டு துளைக்காத ஆடையை ஷேன் தமுரா அணிந்திருந்தாக கூறிய போலீசார், அவர் தீவிர மனநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளனர். ஷேன் தமுரா வை “Pure evil”என்ற வார்த்தையால் சாடியுள்ள காவல்துறை, நியூயார்க்கின் இதய பகுதியில் நுழைந்து, அப்பாவி மக்களையும், காப்பாற்றத் துடித்த போலீஸையும் சுட்டுக்கொன்றதாகக் கூறியுள்ளது.