ஜப்பான் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், சிவ பக்தராகவே மாறிய சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சிவ பக்தியில் மூழ்கிய அவர் புதுச்சேரியில் சிவன் கோயிலைக் கட்டவும் திட்டமிட்டுள்ளார்.
ஜப்பானைச் சேர்ந்த 41 வயதான ஹோஷி தகாயுகி, டோக்கியோவில் அழகு சாதனப் பொருட்களின் விற்பனை நிலையங்களை நடத்தி வந்தவர்.
20 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்திற்கு வந்த அவர், பனை ஓலைச் சுவடி நாடி ஜோதிட அமர்வில் கலந்து கொண்டார். அவரது பெயருக்கு வந்த ஓலைச்சுவடியில், கடந்த காலத்தில் இமயமலையில் வாழ்ந்ததாகவும், நிகழ்காலத்தில் இந்து ஆன்மிக வழியில் பயணிக்க அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதை எண்ணியபடியே ஜப்பானுக்குத் திரும்பிய ஹோஷி தகாயுதிக்கு விசித்திரமான கனவு வந்திருக்கிறது. கடந்த காலத்தில் உத்தரகண்ட்டில் இருப்பது போலக் காட்சி தென்பட, அந்தக் கனவு தனது வாழ்க்கையையே மாற்றிவிட்டதாகக் கூறியிருக்கிறார் ஹோஷி தகாயுகி.
தனது தொழிலை நிர்வாகிகளிடம் ஒப்படைத்த அவர், முழுநேர சிவ பக்தராக காவி உடைக்கு மாறினார். டோக்கியோவில் சிவனுக்காகக் கோயில் ஒன்றைக் கட்டி பூஜைகளையும் செய்து வருகிறார். பால கும்ப குருமுனி என்ற பெயரால் அறியப்படும் அவர், 20 சீடர்களுடன் இந்தியா வந்து, கன்வர் யாத்திரையில் பங்கெடுத்துக் கொண்டார். அத்துடன் கன்வர் யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்காக, டேராடூனில் 2 நாள் உணவு முகாமையும் நடத்தி வருகிறார்.
புதுச்சேரியில் 35 ஏக்கர் நிலத்தில் பெரிய சிவன் கோயிலை கட்டவுள்ளதாகவும், உத்தரகாண்டில் ஆசிரமத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார். ஜப்பானியத் தொழிலதிபர் ஒருவர், தமிழகத்தில் மனமாற்றம் அடைந்து, சிவபக்தராக வலம் வருவது பலரையும் வியக்க வைத்துள்ளது.