ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்று, குழந்தையில்லாத தம்பதிகளை குறிவைத்து மிகப்பெரிய மோசடியை அரங்கேற்றிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பச்சிளங்குழந்தைகளை 90 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி 35 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்ததும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
திருமணத்திற்குப் பின் குழந்தை பெற்றெடுக்க வேண்டும் என்பது ஒவ்வொரு தம்பதியின் ஆசை, கனவு… அது நிறைவேறாமல் போகும்பட்சத்தில் வாடகைத்தாய் மூலமோ, அல்லது செயற்கை கருத்தரித்தல் மூலமாகவே குழந்தையை பெற்றெடுக்கும் நிலைக்குத் தம்பதியினர் தள்ளப்படுகின்றனர்.
மாறிவரும் உணவுப்பழக்கம், மன அழுத்தம், மருத்துவ காரணங்களால் குழந்தையின்மை அதிகரித்துவரும் நிலையில், செயற்கை கருத்தரித்தல் மையங்கள் புற்றீசல்போல் முளைத்து வருவதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது.
இந்த நிலையில், தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஐவிஎஃப் முறையில், வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பெற்றுக் கொள்ள விரும்பிய தம்பதியை ஏமாற்றியிருக்கிறது மருத்துவமனை ஒன்று. செகந்தராபாத்தில் உள்ள யூனிவர்சல் சிருஷ்டி கருதரித்தல் மையத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மருத்துவமனைக்கு சென்ற ராஜஸ்தானைச் சேர்ந்த குழந்தையில்லாத தம்பதி மருத்துவர் நர்மதாவை அணுகியுள்ளனர்.
அனைத்தையும் விசாரித்த மருத்துவர், வாடகைத் தாய் மூலமாக மட்டுமே குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என்றும், அதற்கு 35 லட்சம் ரூபாய்வரை செலவாகும் என்றும் கூறியிருக்கிறார். இதை ஏற்றுக்கொண்டு ராஜஸ்தான் தம்பதியினர் முழு பணத்தையும் செலுத்தியுள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் தம்பதியை தொடர்பு கொண்ட மருத்துவர் நர்மதா, ஆண் குழந்தை பிறந்திருப்பதாகவும், வாடகை தாய்க்கு ஆப்ரேஷன் செய்யப்பட்டிருப்பதால் கூடுதலாக 2 லட்சம் பணம் செலுத்துமாறும் கூறியிருக்கிறார். குழந்தை கிடைத்த மகிழ்ச்சியில் அதையும் மறுக்காமல் கட்டியுள்ளனர் ராஜஸ்தான் தம்பதியினர்.
சில மாதங்களுக்குப் பின் குழந்தையின் தோற்றத்தில் சந்தேகம் ஏற்படவே, டெல்லியில் உள்ள மருத்துவமனையில் குழந்தைக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் குழந்தையின டிஎன்ஏ வேறு ஒருவருடையது என தெரியவந்ததால் மருத்துவர் நர்மதாவிடம் கேட்டுள்ளனர். முன்னுக்குபின் முரணாக பதிலளித்த மருத்துவர் நர்மதா, பின்னர் மிரட்டியதாக தெரிகிறது.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மருத்துவர் நர்மதா, அவரது மகன் ஜெயந்த் கிருஷ்ணா, மருத்துவமனை ஊழியர்கள் உள்ளிட்ட 8 பேரை கைது செய்து விசாரித்தனர். அதில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது.
செயற்கை கருவூட்டல் முறையில், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுத் தருவதாகக் கூறிய மருத்துவமனை, பின்னர் அசாமைச் சேர்ந்த தம்பதியிடம் பிறந்து 2 நாளேஆன ஆண் குழந்தையை 90 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி, ராஜஸ்தான் தம்பதியிடம் கொடுத்தது தெரியவந்தது.
மருத்துவர் நர்மதா மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும், இவர் நடத்தி வந்த கருத்தரித்தல் மையம் லைசென்ஸ் பெறவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், பல்வேறு மாநிலங்களில் கருவுற்றிருக்கும் ஏழை தாய்மார்களை மூளைச்சலவை செய்து, அவர்களது குழந்தைகளை பணம் கொடுத்து வாங்கி முறைகேட்டில் ஈடுபட்டு வந்ததும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. விசாரணை தொடரும் நிலையில், இன்னும் பல முறைகேடுகள் அம்பலமாகும் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.