ரஷ்யாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 4 மீட்டர் உயரத்துக்கு சுனாமி பேரலை எழும்பியது.
ரஷ்யாவின் கிழக்கு பகுதியான கம்சட்கா தீபகற்பத்தில் இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கம்சட்கா பகுதிக்கு கிழக்கு, தென்கிழக்கில் சுமார் 125 கிலோமீட்டர் தொலைவில் சுமார் 19.3 கிலோமீட்டர் ஆழத்தில் 8.7 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து ரஷ்யா, ஜப்பான் மற்றும் பசிபிக் கடலை ஒட்டியுள்ள நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மக்கள் உயரமான பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு சைரன் ஒலிக்கப்பட்டது.
நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதால் பதற்றமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். மேலும் ஆங்காங்கே கட்டடங்கள் இடிந்து விழுந்து சேதமடைந்ததால் மக்கள் அச்சமடைந்தனர்.
இந்நிலையில், சுமார் 4 மீட்டர் உயரம் வரையிலான சுனாமி பேரலைகள் ரஷ்யாவின் குரில் தீவு பகுதியை தாக்கியது. தொடர்ந்து ஹவாய், சிலி, ஜப்பான் மற்றும் சாலமன் தீவுகளில் சுனாமி எச்சரிக்கையை பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் விடுத்தது. நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்டதை ரஷ்யாவின் டாஸ் செய்தி முகமை உறுதி செய்துள்ளது.
அலாஸ்கா, ஹவாய், கலிபோர்னியா, ஓரிகான், வாஷிங்டன் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்த பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவுறுத்தி உள்ளார்.