திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றிய நபர் மீது புகார் அளிக்கச் சென்ற பெண்ணிடம் சென்னை திருமங்கலம் காவல் ஆய்வாளர் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பம்பல் பகுதியைச் சேர்ந்த இளங்கோ என்பவர் கருத்து வேறுபாடு காரணமாகத் தனது மனைவியைப் பிரிந்துள்ளார். மேலும், அண்ணா நகரை சேர்ந்த தனது தோழியுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இதில், அந்த பெண் கர்ப்பமான நிலையில், அவரை திருமணம் செய்துகொள்ள இளங்கோ மறுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், 125 சவரன் நகைகளைப் பெற்றுக்கொண்டு திருப்பிக்கொடுக்க மறுத்ததாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
இது தொடர்பாகத் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. அப்போது, சுப்புலட்சுமி என்ற காவல் ஆய்வாளர் வழக்குப் பதிவு செய்ய 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும், புகார் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளவில்லை எனவும் பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டியுள்ளார்.