மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் இருந்தபோதிலும் பாதுகாப்புத் துறையில், மேம்படுத்தப்பட்ட புதிய மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளை உற்பத்தி செய்வதில் ரஷ்யா வேகமாக முன்னேறி வருகிறது. மூன்றாண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் உக்ரைனுடனான போரில், ரஷ்யா தனது புதிய R -77 BVR வகை AIR to AIR ஏவுகணையைப் பயன்படுத்தியுள்ளது. இதன் மூலம், அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளையும் நடுங்க வைத்திருக்கிறது ரஷ்யா. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
சீனாவின் PL -15, கண்ணுக்குப் புலனாகாத ரேடார்-வழிகாட்டப்பட்ட AIR to AIR ஏவுகணையாகும். 300 கிலோமீட்டர் தூரம் வரை செல்லக்கூடிய இந்த ஏவுகணை ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு அதிக வேகத்தில் பறக்கக் கூடியதாகும். எதிரியின் போர் விமானங்கள், குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் Airborne Early Warning and Control System கொண்ட விமானங்களையும் நீண்ட தூரத்திலிருந்தே தாக்கி அழிக்கத் திறன் கொண்டதாகும்.
சீனாவின் இந்த PL -15E ஏவுகணைகளை இந்தியா மீது பாகிஸ்தான் செலுத்தியது. ஆனால் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் PL -15E ஏவுகணைகளை நடுவானிலேயே இடைமறித்து இந்தியா சுட்டு வீழ்த்தியது. இதற்கிடையே சீனாவுக்குப் போட்டியாக அமெரிக்கா, AIM-260A Joint Advanced Tactical ஏவுகணையை உருவாக்கி வருகிறது.
எந்த அதிநவீன ஏவுகணைகளையும் இடைமறித்து அழிக்கும் வான் பாதுகாப்பு அமைப்பில் முன்னணியில் உள்ள இந்தியாவும், அஸ்திரா ஏவுகணையைத் தயாரித்துள்ளது. இது சுமார் 100 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கக் கூடிய நீண்ட தூர AIR to AIR ஏவுகணையாகும். இந்த சூழலில் ரஷ்யா, தனது புதிய நீண்ட தூர AIR to AIR ஏவுகணையான R -77 BVR-யை உக்ரைன் போரில் பயன்படுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Su-35S Flanker-E மல்டிரோல் போர் விமானம், அதன் உடற்பகுதியின் கீழ் உள்ள தூண்களில் இரண்டு R -77 BVR ஏவுகணைகளுடன் பறந்து செல்வதை ஒரு புகைப்படம் காட்டுகிறது. உக்ரைன் போரில் ரஷ்யா பயன்படுத்திய ஆயுதங்களுடன் தொடர்புடைய ஒரு சிதைவிலிருந்து மற்றொரு புகைப்படமும் வெளியாகியுள்ளது. அது வெட்டப்பட்ட சிலுவை வடிவ வால் துடுப்புடன் கூடிய ஏவுகணையின் பகுதிகளைக் காட்டுகிறது. இது ரஷ்ய R-77M BVR ஏவுகணையைச் சேர்ந்தது என்று பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கண்ணுக்குப் புலனாகாத R-77M BVR ஏவுகணை 160 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கக் கூடியது என்றும் மேற்கத்திய பாதுகாப்பு நிபுணர்கள் நம்புகிறார்கள். அமெரிக்காவின் AIM-120C-7 ஏவுகணையை விட, ரஷ்யாவின் R-77M ஏவுகணை உயர்ந்த தொழில்நுட்பம் மற்றும் அதிவேகம் கொண்டது என்று ரஷ்யச் சிறப்புப் படை மற்றும் ஏவுகணை உற்பத்தி அமைப்பான Vympel தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் R-77-1 ஏவுகணையின் வளர்ச்சியாக, மிகவும் மேம்பட்ட வகையில் R-77M உருவாக்கப் பட்டுள்ளது. 4.08 மீட்டர் நீளமும் 200 மில்லிமீட்டர் விட்டமும் கொண்ட R-77M ஏவுகணையின் மொத்த அளவு 510 மில்லிமீட்டர் ஆகும். அதிகபட்சமாக 5,100 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கக் கூடிய இந்த ஏவுகணை, சராசரியாக மணிக்கு 3,500 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் என்று கூறப்படுகிறது. 5 கிலோ மீட்டர் முதல் 30 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும்.
160 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கக் கூடிய திறன் கொண்ட இந்த ஏவுகணை, இலக்குக்கு ஒரு பெரிய ‘தப்பிக்க முடியாத மண்டலத்தை’ வழங்குகின்றன. விமான எதிர்ப்பு ஏவுகணைகளை அழிக்கும் R -77M ஏவுகணை,தனக்குப் பின்னாலிருந்து தாக்க வரும் ஏவுகணைகளையும் துல்லியமாகச் சுட்டு வீழ்த்தும். subsonic ஏவுகணைகளையும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளையும் கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணைகளையும், மற்றும் குரூஸ் ஏவுகணைகளையும் குறிவைத்துத் தாக்க இந்த ஏவுகணையைப் பயன்படுத்த முடியும்.
ஏற்கெனவே, 2023 ஆம் ஆண்டு, விமான விபத்தில் பலியான உக்ரைன் விமானப்படையின் MiG-29 விமானி ( Andrii “Juice” Pilshchykov )ஆண்ட்ரி “ஜூஸ்” பில்ஷ்சிகோவ், ரஷ்யாவின் R-37M ஏவுகணை தங்களைத் திணறடித்தது என்றும், ஏவுகணையை இடைமறிக்கக் கூட நேரமில்லை என்றும், வான்போரில் ரஷ்யா ஆதிக்கம் செலுத்துகிறது என்றும் கூறியிருந்தார். மேலும், R-37M ஏவுகணை ஏவப்பட்டால் மரணம் நிச்சயம் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா மேம்பட்ட ஏவுகணையான R-77M யைப் பயன்படுத்தி உள்ளது. இது, உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கு எதிரான போரில் ஆதரவு காட்டும் அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளுக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவை வீழ்த்த புதிய தந்திரங்களையும் வியூகங்களையும் அமைக்க வேண்டிய கட்டாயத்தில் அமெரிக்காவும் இங்கிலாந்தும் தள்ளப்பட்டுள்ளன. AIR to AIR ஏவுகணை மேம்பாட்டில் அமெரிக்காவின் ஆளுமை குறையத் தொடங்கியுள்ளது. முன்னணியில் நிற்கும் சீனாவுக்கு இணையான ஏவுகணையைத் தயாரித்து மேற்கு உலகையே நடுங்க வைத்துள்ளார் ரஷ்ய அதிபர் புதின்.