இந்திய ராணுவம் நடத்திய ஆப்ரேஷன் மகாதேவ் நடவடிக்கை பஹல்காம் தாக்குதலை அரங்கேற்றிய 3 தீவிரவாதிகளின் உயிரைக் குடித்துள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் அமெரிக்காவின் M4 carbine rifle போன்ற பயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்தியபோதும், தீவிரவாதிகளுக்கு முடிவு கட்டியுள்ளது இந்திய ராணுவம்.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஸ்ரீநகரில் “ஆப்ரேஷன் மகாதேவ்” பெயரில் தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டது ராணுவம்.
லஷ்கா்-ஏ-தொய்பா தீவிரவாதிகள் ரகசிய செய்திகளை அனுப்பப் பயன்படுத்தும் தகவல்தொடர்பு சாதனத்தின் தொழில்நுட்ப சமிக்ஞை, ஹாா்வான் வனப்பகுதியிலிருந்து கிடைக்க, புலி போன்று பதுங்கி பாய்ந்தது ராணுவம்…. 24 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் மற்றும் 4 பாரா படையினரைக் கொண்ட குழு பயங்கரவாதிகளை வேட்டையாடியது.
ராணுவத்தினால் சுட்டுக்கொல்லப்பட்ட 3 தீவிரவாதிகளும் பஹல்காம் தாக்குதலை அரங்கேற்றியவர்கள் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பஹல்காம் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட சுலைமான அலியாஸ் ஃபைசல் லஷ்கர் – இ-தொய்பா தீவிரவாத அமைப்பில் A-Category கமாண்டராக செயல்பட்டார் என்பதும், பாகிஸ்தான் ராணுவத்தில் சிறப்புப் பயிற்சி பெற்ற SSG படைப்பிரிவில் கமாண்டாவோ பணியாற்றினார் என்பதும் தெரியவந்துள்ளது.
இதேபோன்று லஷ்கர்-இ-தொய்பாவின் A-Category தீவிரவாதி ஆஃப்கன், A-grade தீவிரவாதி ஜிப்ரான் ஆகியோரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து அதிநவீன அமெரிக்காவின் M4 கார்பைன் ரைபிள், இரண்டு ஏகே.47 துப்பாக்கிகள், 17 கையேறி குண்டுகள் போன்ற பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீரில் அத்துமீறும் தீவிரவாதிகள் வேட்டையாடப்பட்டு வரும் நிலையில், அண்மைக்காலமாக அவர்களிடம் மேற்கத்திய ஆயுதங்கள் கிடைத்து வருவது கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த 2021ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியபோது, அமெரிக்க ராணுவத் தளவாடங்கள் தாலிபான்களின் கைகளில் சிக்கின. அந்த ஆயுதங்கள் சட்டவிரோத சந்தைகள் மூலம் பாகிஸ்தானுக்குள் நுழைந்ததும், பின்னர் அவை இந்திய எல்லையில் தீவிரவாதிகளுக்குக் கைமாறியதும் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் M4 Carbine ரைபிள்கள் இலகுவானது என்பதால், காஷ்மீர் போன்ற செங்குத்தான மலைப்பகுதிகள், கரடுமுரடான காட்டுப்பாதைகளில் எடுத்துச் செல்வது எளிதானது, எடைகுறைவானது. இதன் மூலம் கூடுதல் ஆயுதங்களையும் கொண்டுசெல்ல முடியும் என்பதால் தீவிரவாதிகள் இவ்வகை ரைபிள்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருவது தெரியவந்துள்ளது. மேலும் M4 Carbine-னில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளதால், எந்த சூழ்நிலையிலும் எதிரிகளைத் துல்லியமாகத் தாக்கலாம்.
தீவிரவாதிகளிடம் கைப்பற்றப்பட்ட நவீன ஆயுதங்கள், இந்தியாவின் போர் உத்தியை மறுசீரமைப்பதற்கான சமிக்ஞையாகப் பார்க்கப்படுகிறது. மேலும் எல்லைகளில் வேலி அமைத்தல், பயங்கரவாதத்திற்கு நிதி மற்றும் ஆயுதக்கடத்தலுக்கு எதிரான உலகளாவிய ஒத்துழைப்பு போன்றவற்றையும் வலியுறுத்துகிறது.