சர்வதேச அளவில் ஒரே நாளில் 1700 மனிதர்களையும், விலங்குகளையும் காவு வாங்கிய நியோஸ் ஏரி ஆப்பிரிக்காவின் கொலையாளி என்றே அழைக்கப்படுகிறது. அமைதியான ஏரி, பூகம்பமாக மாறி பல உயிர்களை பலி வாங்கிய எப்படி? காரணம் என்ன? என்பது குறித்துப் பார்க்கலாம்.
1986ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி நடந்த அந்த சம்பவத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. மத்திய ஆப்பிரிக்கா நாடான கேமரூனின் வடமேற்கு பகுதியில் உள்ளது மிகவும் அபாயகரமான நியோஸ் ஏரி… 1986ம் ஆண்டு திடீரென கொடிய நச்சு வாயுவை இந்த ஏரி கொப்பளிக்க, 100 மீட்டர் உயரத்திற்கு மேகங்கள் படர்ந்தன.
இதன் காரணமாக ஆக்ஸிஜன் அளவு குறைந்து, ச்சா, நயோஸ், சுபும் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 1700-க்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான விலங்குகளும் செத்து மடிந்தன. பூச்சிகள் கூட தப்ப முடியவில்லை.
முதலில் இறப்புக்கான காரணம் தெரியாத நிலையில், உடற்கூராய்வும், ஏரி நீரின் பரிசோதனையும் உண்மையை வெட்டவெளிச்சமாக்கியது. ஏரியில் இருந்து அதிகளவில் கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேறியதும், காற்று மண்டலத்தில் ஆக்ஸிஜன் குறைந்ததுமே உயிரிழப்புக்குக் காரணம் என்ற விஷயம் விஞ்ஞானிகளுக்குப் புலப்பட்டது.
நியோஸ் ஏரி ஒரு எரிமலை ஏரி என்பதால், அந்த நிலப்பரப்பின் ஆழமான பகுதிகளில் இருந்து மாக்மா எனும் எரிமலை குழம்பில் இருந்து வெளிப்படும் கார்பன்-டை-ஆக்ஸைடு, 682 மீட்டர் ஆழம் கொண்ட ஏரியின் அடிப்பகுதியில் சேர்ந்துவிடுகிறது. நிலச்சரிவு ஏற்படும் சமயங்களில் ஏற்படும் அழுத்தத்தால், அவை பூகம்பம் போல் பீறிட்டு எழுந்து கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியேற்றுவது விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்தது.
நியாஸ் ஏரிக்கு முன்னால் 1984ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி கேமரூனில் உள்ள மனூன் ஏரியில் கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேறி 100 கிலோமீட்டருக்கு மேல் பரவியதில் 37 பேர் உயிரிழந்தனர். எதிர்கால பேரழிவு நிகழ்வுகளைத் தடுக்கும் வகையில், நியோஸ் ஏரி மிகத் தீவிரமான கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஏரியை சுற்றி சென்சார்களும், சைரன்களும் வைக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவேளை நச்சு வாயுக்கள் வெளியேறினால் அவை பொதுமக்களை எச்சரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நியோஸ் ஏரி போன்றே காங்கோவில் உள்ள கிவு ஏரியும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.