அதானி நிறுவனத்தால் தொடங்கப்பட்ட விழிஞ்சம் துறைமுகம் உருவான ஓராண்டு காலக்கட்டத்தில் கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கி, ஒட்டுமொத்த கேரளாவின் தலையெழுத்தை மாற்றியிருக்கிறது. அது பற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்.
கேரள தலைநகரான திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள விழிஞ்சம் துறைமுகம், நாட்டின் முதல் மெகா டிரான்ஸ் ஷிப்மென்ட் கொள்கலன் முனையமாகும். அதானி குழும நிறுவனத்தால் கடந்த 2014-ம் ஆண்டு இந்த துறைமுகத்தின் கட்டுமான பணிகள் துவங்கப்பட்டபோதும், பெருமழையுடன் வந்த ஒக்கி புயல், கொரோனா நோய்த்தொற்று போன்ற பேரிடர்கள் கட்டுமான பணிகளில் தொய்வை ஏற்படுத்தின.
அதன் காரணமாக 10 ஆண்டுகள் கழித்து முதற்கட்ட கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த 2024-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி விழிஞ்சம் துறைமுகத்தைத் திறந்து வைத்து நாட்டிற்காக அர்ப்பணித்தார். கேரளாவில் புதிய தொழில்கள் தொடங்குவது கடினம் என்ற பிம்பம் விழிஞ்சம் துறைமுகத்தின் உருவாக்கத்தால் தகர்த்தெறியப்பட்டது.
இந்த துறைமுகத்திற்கு இதுவரை 8 ஆயிரம் கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவே கேரள மாநிலத்தின் மிகப்பெரிய தனியார் முதலீடாகவும் இருந்து வருகிறது. விழிஞ்சம் துறைமுகத்தில் இயற்கையாக உள்ள 20 மீட்டருக்கும் ஆழமான கடல் பகுதி, உலகின் மிகப்பெரிய கப்பல்கள் துறைமுகத்திற்குள் எளிதாக வந்து செல்ல வழியமைத்தது. ஒரே ஆண்டில் சுமார் 400-க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய ரக கப்பல்கள் இந்த துறைமுகத்தின் சேவையைப் பயன்படுத்தியுள்ளதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் முதல் AUTOMATIC துறைமுகமாக உருவான விழிஞ்சம் துறைமுகம், ஆண்கள் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டு வந்த LOADING மற்றும் UNLOADING போன்ற கடினமான பணிகளில் பெண்களும் சிறப்பாகச் செயல்பட வழிவகுத்தது.
தற்போது ஒரு PHASE மட்டுமே செயல்பட்டு வரும் விழிஞ்சம் துறைமுகத்தில் ஏற்கனவே, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர். இன்னும் சில ஆண்டுகளுக்குள் இரண்டாம் PHASE-ன் பணிகளும் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில், ஏறக்குறைய 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த துறைமுகத்தால் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச கடல் வழித்தடத்தில் இருந்து வெறும் 10 நாட்டிகல் மைல் தொலைவில் உள்ள இந்த துறைமுகம் செயல்படத் தொடங்கிய ஒரே ஆண்டில் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. விழிஞ்சம் துறைமுகத்தின் உருவாக்கத்தால் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தை நம்பியிருந்த பல இந்தியக் கப்பல்களுக்கு, ஒவ்வொரு பயணத்தின்போதும் பல நூறு அமெரிக்க டாலர்கள் மிச்சமாகி வருகிறது. இது இந்தியாவின் பணம் வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடுத்து நாட்டின் பொருளாதாரம் பெருமளவு உயர மிகப்பெரும் வரப்பிரசாதமாக மாறியுள்ளது.
திருவனந்தபுரம் விமான நிலையத்தின் பராமரிப்பு பணிகளையும் அதானி குழும நிறுவனமே மேற்கொண்டு வரும் நிலையில், அதே நகரில் இந்த துறைமுகமும் அமைந்துள்ளது CREW CHANGE போன்ற காரணங்களுக்காக பல்வேறு கப்பல்கள் நாடி வரும் வாய்ப்பையும் அதிகரித்துள்ளது.
அதேபோல, எரிவாயு நிரப்பும் வசதிகளையும் இந்த துறைமுகத்தில் உருவாக்கப் போவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், அதற்காகவும் பல்வேறு கப்பல்கள் இந்த துறைமுகத்தைப் பயன்படுத்தும் நிலை உருவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கடல் வாணிபத்தில் சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்க விழிஞ்சம் துறைமுகம் இந்தியாவிற்குப் பேருதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது.
உருவான ஒரே ஆண்டில் நெதர்லாந்தின் ROTTERDAM, லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற உலகத் தரம் வாய்ந்த துறைமுகங்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் விழிஞ்சம் துறைமுகம் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த துறைமுகத்தால் எந்தவித சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காகவே, அதானி குழும நிறுவனம் தங்கள் விழிஞ்சம் துறைமுகத்திற்கான மொத்த முதலீட்டில் இருந்து பெரும்பங்கை சுற்றுச்சூழல் ஆராய்ச்சிக்காக ஒதுக்கியுள்ளது.
இதன் காரணமாக பல்வேறு இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளால் மூளைச்சலவை செய்யப்பட்டு இந்த துறைமுகத்திற்கு எதிராகப் போராடிய மக்கள், தற்போது விழிஞ்சம் துறைமுகத்திற்கு அருகே அரசு கொண்டு வர நினைக்கும் திட்ட ஒப்பந்தங்களை அதானி குழுமத்திடம் கொடுக்க வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த அளவிற்கு மக்கள் மனதில் நம்பிக்கையையும், நன்மதிப்பையும் சம்பாதித்துள்ள விழிஞ்சம் துறைமுகம், 2025-ம் ஆண்டிற்கு முன்பே அமைந்திருந்தால் கடல் வாணிபத்தில் இந்தியா மிகப்பெரிய அளவில் கோலோச்சியிருக்கும் எனக் கடல் வாணிப நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.