பீகாரில் வளர்ப்பு நாய்க்கு இருப்பிடச் சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், அந்த பாணியில் மற்றொரு சம்பவம் நடந்திருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. என்ன நடந்தது? பின்னணி என்ன? என்பது குறித்துப் பார்க்கலாம்.. விரிவாக..
சட்டப்பேரவை தேர்தலை எதிர்நோக்கியிருக்கும் பீகாரில் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளைத் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் மேற்கொண்டது. ஆதார், ரேசன் கார்டு போன்றவை வாக்காளர் அடையாள அட்டை பெறத் தகுதியான ஆவணம் அல்ல என்று கூறியிருந்த தேர்தல் ஆணையம், இருப்பிடச் சான்று, பிறப்பு சான்று உள்ளிட்ட 11 ஆவணங்களை அடிப்படையாக வைத்து, வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பங்களை ஏற்றது.
வாக்காளர் சீர்திருத்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை காட்டிய நிலையில் பீகார் மாநிலம் பாட்னாவிற்கு அருகேயுள்ள மசௌரி பகுதியில் RTPS போர்ட்டலில் Dog Babu என்ற பெயரில் கோல்டன் ரெட்ரீவர் நாய் ஒன்றுக்கு அதிகாரிகள் இருப்பிடச் சான்று வழங்கியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. நாயின் போட்டோவுடன் கூடிய சான்றிதழ் சமூக வலைத்தளங்களில் வெளியாகி விவாதத்தையும் கிளப்பியது.
உடனடியாக அந்த சான்றிதழ் ரத்து செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரி சஸ்பெண்ட் நடவடிக்கை பாய்ந்தபோதும், 11 ஆவணங்களை அடிப்படையாக வைத்து, வாக்குரிமையை உறுதி செய்வதில் பீகார் அரசு தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் கடுமையான சாடின.
இந்த நிலையில் நவாடா மாவட்டத்தில் அதே பாணியில் நாய் ஒன்றுக்கு இருப்பிட சான்று கேட்டு ஆன்லைனில் விண்ணப்பம் வந்திருப்பது அதிகாரிகளை விழிபிதுங்க வைத்துள்ளது. Dogesh Babu என்ற பெயரில் பெறப்பட்ட விண்ணப்பத்தில், தந்தை பெயர் டாகேஷ் பாபா, தாய் பெயர் டாகேஷ் மாமி, 11வது வார்டு, கரோந்த் கிராமம், நவாடா மாவட்டம் போன்ற விவரங்களை குறிப்பிட்ட நாயின் புகைப்படமும் இணைக்கப்பட்டிருந்தது.
ஏற்கனவே Dog babu விவகாரம் பீகாரில் புயலைக் கிளப்பிய நிலையில், அதே பாணியில் விண்ணப்பித்தவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க பல்வேறு பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. RTPS சேவை மையத்தைத் தவறாகப் பயன்படுத்திய நபர் குறித்து முழுமையான விசாரணை நடத்திய கடுமையான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.