ரஷ்யாவின் கிழக்குப்பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், பொதுமக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. சுனாமியின் தாக்கம் காரணமாக ஜப்பான் மற்றும் பசிபிக் கடலை ஒட்டிய நாடுகளில் கரையோர பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
குலுங்கிய கட்டடங்கள்… சரிந்து விழுந்த பொருட்கள்…. உறைந்து போன மக்கள் என ரஷ்யாவை உலுக்கியெடுத்துள்ளது சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.
ரஷ்யாவின் கிழக்குப் பகுதியான கம்சட்கா தீபகற்பத்தில் இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 8.8 ஆக பதிவான பூகம்பத்தால் கட்டடங்கள் திடீரென குலுங்க, அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள், வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். சில கட்டடங்கள் இடிந்து விழுந்தது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது.
ஒரு பக்கம் நிலநடுக்கம் என்றால், பூகம்பத்தின் தாக்கத்தால், 4 மீட்டர் உயரத்திற்கு எழுந்த சுனாமி பேரலைகள் கடலோர பகுதிகளை சீற்றத்துடன் விழுங்கியது. உயிரைக் காப்பாற்றிக் கொள்ளப் பொதுமக்கள் வீட்டின் மாடிகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தால் கிண்டர் கார்டன் ஒன்று உருக்குலைந்த நிலையில், அங்கிருந்த குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சுனாமி பேரலையின் தாக்கத்தால், ரஷ்யாவின் ஆன்டிஃபெரோவ் தீவுப்பகுதிகளில் ஏராளமான கடற்சிங்கங்கள் கரைகளை நோக்கி இழுத்து வரப்பட்டன. நிலநடுக்கத்தின் வீரியத்தால் எழுந்த சுனாமி பேரலை, ரஷ்யாவைத் தொடர்ந்து ஜப்பானின் ஹோக்கெய்டோ நகரில் 8 இடங்களைத் தாக்கியது. மீண்டும் சுனாமி அலைகள் தாக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் நிலையில், ஜப்பானில் 20 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
அமெரிக்கா, சீனா, பிலிப்பைன்ஸ், சிலி உள்ளிட்ட பசிபிக் பெருங்கடலை ஒட்டிய 40 நாடுகளுக்குச் சுனாமி எச்சரிக்கை. விடுக்கப்பட்டது. மக்கள் உயரமான பகுதிக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு சைரன் ஒலிக்கப்பட்டது.
ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ஒரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த 1952-ம் ஆண்டு இதேபகுதியில் ரிக்டர் 9 ஆகப் பதிவான நிலநடுக்கத்தால், அமெரிக்காவின் ஹவாய் பகுதியில் 9.1 மீட்டர் அளவுக்குச் சுனாமி பேரலைகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.