சென்னையில் கல்லூரி மாணவர் கார் ஏற்றி கொல்லப்பட்ட வழக்கில், திமுக நிர்வாகியின் பேரன் உட்பட கைதான 3 பேருக்கும் ஆகஸ்டு 13-ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை திருமங்கலத்தில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய சம்பவத்தில் கல்லூரி மாணவர் நித்தின் சாய் உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்றொரு மாணவர் அபிஷேக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், நித்தின் சாய் விபத்தால் உயிரிழக்கவில்லை எனவும் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி, பெற்றோர் மற்றும் உறவினர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன், மாணவர் மீது காரை ஏற்றி கொலை செய்த திமுக தலைமை கழக செயற்குழு உறுப்பினர் தனசேகரின் பேரன் சந்துருவை கைது செய்யவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மாணவர் நித்தின் சாய் கார் ஏற்றி கொலை செய்யப்பட்டதை உறுதி செய்தனர்.
தொடர்ந்து வழக்கில் தொடர்புடைய இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த சந்துரு உள்ளிட்ட 3 பேரை போலீசார் அடுத்தடுத்து கைது செய்தனர். இந்நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 3 பேருக்கும் ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.