விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்படும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் இந்து முன்னணி சார்பில் “மாற்றம் தந்த முருக பக்தர்கள் மாநாடு – இந்த எழுச்சி திக்கெட்டும் பரவட்டும்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரையில் நடைபெற்ற முருக பக்தர் மாநாடு, இந்துக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். திண்டுக்கல் மலைக் கோட்டையில் உள்ள அபிராமி அம்மன் கோயிலில் விக்ரகங்களை பிரதிஷ்டை செய்ய அறநிலையத்துறையிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும், திண்டுக்கல்லில் அபிராமி அம்மன் பக்தர்கள் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்கெடுவதற்கு போதை கலாச்சாரமே காரணம் எனக்கூறிய அவர், போதைப் பொருளை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.