அரியலூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் மது அருந்தியதை வீடியோ எடுத்த நபரை, இரும்பு ராடால் சரமாரியாகத் தாக்கிய கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரியலூர் மாவட்டம், இறவாங்குடி கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் ஜெயங்கொண்டத்தில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
முன்னூரான்காடு பகுதியில் ஓய்வெடுப்பதற்காக வாகனத்தை நிறுத்திய அவர், அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் 4 பேர் கொண்ட கும்பல் மது அருந்துவதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
இதனைக் கண்ட அவர்கள் வீடியோ எடுப்பதை தடுத்ததால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கும்பல் சிவகுமாரை சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அவ்வழியாக வந்த பேருந்தில் ஏறி தப்ப முயன்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து பேருந்தில் ஏறிய கும்பல் இரும்பு ராடால் சிவகுமாரை கடுமையாக தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றது.
படுகாயமடைந்த சிவகுமார் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய ஆண்டிமடம் போலீசார் தாக்குதலில் தொடர்புடைய வினோத் குமார் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள மூவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.