தமிழகத்தில் தற்போது ஆணவ படுகொலை அதிகரித்துள்ளதாக திமுக அரசு மீது விசிக தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கேடிசி நகரில் கடந்த 27ஆம் தேதி மென்பொருள் பொறியாளர் கவின் ஆணவ படுகொலை செய்யப்பட்டார்.
கவின் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், ஒரு கோடி ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லையில் திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு பேசிய திருமாவளவன், கவின் ஆணவ படுகொலையில் கைது செய்யப்பட்ட சுர்ஜித்தின் தாயை ஏன் கைது செய்து விசாரணை நடத்தவில்லை என்று கேள்வி எழுப்பினார். தமிழ்நாட்டில் தற்போது ஆணவக் கொலைகள் அதிகரித்துள்ளதாக குற்றஞ்சாட்டிய அவர், ஆணவ படுகொலையை தடுப்பதற்கான சட்டத்தை தமிழக அரசே இயற்ற வேண்டும் என்றார்.
குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 2 பேர் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் என்பதால் சிபிஐயிடம் மிகத் திறமையான அதிகாரிகள் குழுவை கொண்டு இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.