கோவை அவினாசி சாலையில் அரசு ஒப்புதல் கொடுத்த வரைபடத்தை மாற்றி தனியார் உணவகத்திற்குச் சாதகமாக பாலப்பணிகளை மேற்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவறிழைத்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு நிர்வாகம் அவர்களுக்கு ஆதரவாக மேல்முறையீடு செய்திருப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையின் பிரதான பகுதியான அவினாசி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் கடந்த 2020 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தின் போது உயர்மட்ட பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கியது.
சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்குப் பாலம் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், முக்கிய சந்திப்புகளில் ஏறுதளமும், இறங்கு தளமும் அமைக்கப்படுகிறது. இந்த நிலையில் கோவை லட்சுமி மில்ஸ் அருகே உள்ள தனியார் உணவகத்திற்கு உள்ளே செல்லும் பாதையிலும், வெளியே வரும் பாதையிலும் எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக வேறொருவருக்குச் சொந்தமான இடத்தில் தூண்களை அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் திட்டமிட்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தனக்குச் சொந்தமான இடத்தில் சம்பந்தமே இல்லாமல் பாலத்திற்கான தூண் அமைக்கும் பணியைக் கண்டு அதிர்ச்சியடைந்த நபர் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் விசாரணையின் போது தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக நெடுஞ்சாலை அதிகாரிகள் செயல்பட்டதை நீதிமன்றம் கண்டறிந்ததோடு, ஏற்கனவே திட்டமிட்ட வரைபடத்தின் படி பாலத்தை அமைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதோடு புதிய தூண்கள் அமைக்கும் செலவைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளே செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், அந்த உத்தரவுக்கு எதிராகத் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது
தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறையின் ஒப்புதல் பெற்ற வரைபடத்தின் படி பாலப்பணிகளை மேற்கொள்ள வேண்டிய அதிகாரிகள், பொதுமக்களிடம் எந்தவித கருத்துக் கேட்புக் கூட்டத்தையும் நடத்தாமல் தன்னிச்சையாக வரைபடத்தை மாற்றியிருப்பதும் விசாரணையில் உறுதியாகியுள்ளது. அரசின் உத்தரவுக்கு எதிராகவும் தனியார் உணவகத்திற்கு முரணாகவும் நடந்து கொண்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிவடைய வேண்டிய பாலப்பணிகள், ஒரு சில அதிகாரிகளின் தவறால் தற்போது வரை பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வரமுடியாத சூழல் உருவாகியுள்ளது. ஏற்கனவே 7 மாத காலம் தாமதமாகியிருக்கும் நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.