திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யும் நபர் ஒருவர் காவல்துறைக்குப் பணம் கொடுத்துத்தான் மது விற்பனை செய்வதாகத் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சியின் பல்வேறு பகுதிகளில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை நடைபெறுவதாகக் கூறப்படும் நிலையில் கருங்காடு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் சட்ட விரோதமாக மதுவிற்பனை செய்து வந்தார்.
இவர் அருகில் உள்ள அரசு மதுபானக் கடையில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்று வருகிறார்.
தனது தோட்டப்பகுதியில் மறைத்து வைத்து மதுவை விற்கும் நிகழ்வை செல்போனில் பதிவு செய்த நபர் ஒருவர் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த அந்த நபர் திருச்சியின் பல இடங்களில் சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதாகவும், தாங்கள் போலீசாருக்கு பணம் வழங்கி தான் இந்த தொழிலைச் செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில் சட்ட விரோத மதுவிற்பனையைத் தடுக்க மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.