மதுரை மாவட்டம் கள்ளழகர் கோயிலில் ஆடிப் பௌர்ணமி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
மேலூர் அருகே உள்ள உலக பிரசித்திப்பெற்றதும், 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாக விளங்கக்கூடியதுமான கள்ளழகர் கோயிலில் ஆடிப் பௌர்ணமி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியுள்ளது.
10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவை ஒட்டி கோயில் பட்டர்கள் வேத மந்திரங்கள் முழங்க, தங்கக் கொடிமரத்தில், கருடன் உருவம் பதித்த கொடியை ஏற்றி வைத்தனர்.
முன்னதாக, கள்ளழகர் மற்றும் ஶ்ரீதேவி, பூதேவியருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து திருக்கோவில் தங்கக் கொடிமரத்திற்குப் பால், சந்தனம், உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு அபிஷேகமும், மாலை அணிவித்து தீபாராதனையும் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் ஆடிப் பௌர்ணமியான ஆகஸ்ட் 09ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்று மாலை பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி திருக்கதவுகள் திறக்கப்பட்டுப் படி பூஜைகளும், தொடர்ந்து சந்தனக்காப்பு அலங்கார தீபாராதனையும் நடைபெற உள்ளன.