மதுரை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் நிதி முறைகேடு நடந்த புகாரில் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் நிதி முறைகேடு குறித்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவுப்படி, டிஐஜி அபிநவ்குமார் தலைமையிலான விசாரணைக் குழு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், மதுரை மாநகராட்சி 51-வது வார்டு திமுக கவுன்சிலரும், வரி விதிப்பு குழு தலைவருமான விஜயலட்சுமி மற்றும் 96-வது வார்டைச் சேர்ந்த ஒப்பந்த ஊழியர் செந்தில் பாண்டி ஆகியோரிடம் மத்திய குற்றப்பிரிவு உதவி காவல் ஆணையர் வினோதினி விசாரணை நடத்தினார்.
இதில், செந்தில்பாண்டிக்கு முறைகேட்டில் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டார்.
மேலும், திமுக கவுன்சிலர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணனையும் போலீசார் கைது செய்தனர். இதன் மூலம், மாநகராட்சி வரி வசூல் மோசடி தொடர்பாக காவல்துறையால் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 12-ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.