தொழிலாளர் மட்டுமல்லாது அவர்களது குடும்பத்தினரையும் இ.எஸ்.ஐ திட்டத்தின் கீழ் இணைக்கும் வகையில் SPREE எனும் திட்டத்தை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. மத்திய அரசின் SPREE திட்டம் என்றால் என்ன? அதன் மூலம் கிடைக்கும் பயன்கள் என்ன என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.
பத்து அல்லது பத்திற்கும் அதிகமான தொழிலாளர்களைக் கொண்டு தொழில் செய்யும் நிறுவனங்கள், தங்களின் ஊழியர்களை அரசு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இணைக்கும் வகையில் SPREE என்ற புதிய திட்டத்தை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அண்மையில் அறிமுகம் செய்துள்ளது.
தொழில் நிறுவனங்கள் தங்களின் தொழிலாளர்களை எந்தவித கட்டணமுமின்றி SPREE திட்டத்தின் மூலம் இ.எஸ்.ஐ- இல் இணைந்து தொழிலாளர் நலன் சார்ந்த பாதுகாப்பை பெறமுடியும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இ எஸ் ஐ மருத்துவமனை மட்டுமல்லாது அவற்றோடு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள மருத்துவமனைகளிலும் அனைத்துவிதமான சிகிச்சைகளையும் தொழிலாளர் பெற ஏதுவாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலமாக இதற்கான சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் அந்தந்த மண்டல அலுவலகங்களில் இதற்கான உதவி மையங்களும் திறக்கப்பட உள்ளன. தொழிலாளர்கள் அதிகளவில் இருக்கும் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலத்தில் ஏற்கனவே சுமார் 50 லட்சம் பேர் இ.எஸ்.ஐ. திட்டத்தில் இணைந்து பயன்பெற்று வரும் நிலையில், மேலும் பல தொழிலாளர்களை இணைக்கும் மத்திய அரசின் முயற்சிக்குத் தொழிலாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது
இ.எஸ்.ஐ திட்டத்தில் இணைந்த தொழிலாளி எதிர்பாராதவிதமாக உயிரிழக்கும் பட்சத்தில் அவரை சார்ந்துள்ள குடும்பத்தினர் தங்களின் வாழ்நாள் முழுவதும் எவ்வித சிரமமுமின்றி வாழ உதவித் தொகையும் வழங்கப்படுகிறது. பெற்றோர்களை இழந்த வாரிசுகளுக்கு மட்டுமல்ல, வாரிசுகளை இழந்த பெற்றோர்களுக்கும் உதவித் தொகை கிடைக்கும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உச்ச வரம்பில்லாத சிகிச்சைக்கான செலவு, தொழிலாளர்கள் மட்டுமின்றி அவர்களது குடும்பத்தினரும் பயன்பெறும் வசதி என மருத்துவம் சார்ந்த செலவினங்களிலிருந்து தொழிலாளர்களை மீட்கும் வரப்பிரதாசமாக இந்த SPREE திட்டம் அமைந்திருக்கிறது. டிசம்பர் ஒன்றாம் தேதி வரை நடைபெறும் முகாம்களில் தொழிலாளர்கள் அனைவரும் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து பயன்பெற வேண்டும் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.