தேனி மாவட்டம், குரங்கணி அருகே போராட்டம் நடத்திய சீமானுக்காக, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் கைகோர்த்து சாலையை மறித்து நின்றதால் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
குரங்கணி அருகே உள்ள அடகுபாறையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், வனத்துறை தடையை மீறி நாட்டு மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லும் போராட்டம் நடைபெற்றது. இதனிடையே வார விடுமுறையையொட்டி சுற்றுலாத்தலமான குரங்கணிக்கு செல்வதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்திருந்தனர்.
அப்போது சீமானின் போராட்டத்துக்காக, குரங்கணி செல்லும் வாகனங்களை செல்ல விடாமல் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் கைகோர்த்தபடி சாலையை மறித்து நின்றனர். இதனை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர்வாசிகளும் குரங்கணிக்கு செல்ல முடியாமல் கடும் அவதியடைந்தனர்.