திருப்பத்தூரில், பள்ளி கிணற்றில் மாணவன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் சம்மந்தப்பட்ட பள்ளியை முற்றுகையிடச் சென்ற உறவினர்களைக் காவலர்கள் தடுத்து நிறுத்தினர்.
திருப்பத்தூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்றுவந்த மாணவர் முகிலன், பள்ளி வளாகத்தில் உள்ள கிணற்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சம்மந்தப்பட்ட பள்ளியை மூட வலியுறுத்தியும், பாதிரியாரைக் கைது செய்யக்கோரியும் மாணவரின் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
மேலும், உயிரிழந்த மாணவரின் உடலை வாங்கப் பெற்றோர் மறுப்பு தெரிவித்ததால் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையிலேயே உடல் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மருத்துவமனையிலிருந்த மாணவரின் உறவினர்கள், சம்மந்தப்பட்ட பள்ளியை முற்றுகையிடப் போவதாகக் கூறினர்.
இதனால் காவல்துறைக்கும் மாணவரின் உறவினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பள்ளியை முற்றுகையிடுவதற்காகச் செல்ல முயன்ற உறவினர்களை, கயிற்றினை கொண்டு காவல்துறை தடுத்து நிறுத்தினர்.