வெளிநாடுகளுக்கு உயர்கல்வி கற்கக் கடன்வாங்கிச் செல்லும் மாணவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும், அவர்களுக்கு வேலை கிடைப்பதில் உள்ள சிக்கல்கள் பற்றியும் தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்த கருத்து பேசுபொருளாகியுள்ளது. அது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களுக்குச் சென்று கல்வி பயில பெரும்பாலான இந்திய மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி கற்பதை விரும்புகின்றனர். குறிப்பாக, அமெரிக்கா அவர்களது கனவு தேசமாக இருந்து வருகிறது.
ஆனால், தற்போதைய சூழலில் அமெரிக்கா சென்று கல்வி பயில்வதில் உள்ள சிக்கல்கள் குறித்து இதுவரை யாரும் பேசியதில்லை. இந்நிலையில், அது குறித்து உரையாடலை ஜோஹோ நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தற்போது தொடங்கி வைத்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள ஒரு சிறிய கல்லூரியில் சேர்ந்து முதுகலைப் பட்டம் பெற, இந்திய மாணவர் ஒருவர் 70 லட்சம் கடன் வாங்கிய செய்தி அண்மையில் வெளியானது. அந்த கடனுக்கான வட்டி 12 சதவீதம். இந்த செய்தியைச் சுட்டிக்காட்டி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்ரீதர் வேம்பு, வெளிநாட்டுப் படிப்பு, வேலைவாய்ப்பு உள்ளிட்டவை குறித்த தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
வெளிநாட்டில் பட்டப்படிப்புகளைத் தொடர அதிக கடன் வாங்குவது குறித்து மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். வெளிநாடு என்றல்ல, இந்தியாவில் படிப்பைத் தொடரவும் அதிக கடன் வாங்குவது புத்திசாலித்தனம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
கல்வியின் பெயரில் இளைஞர்களைக் கடனில் சிக்க வைக்கக்கூடாது என்பதில் தான் உறுதியாக உள்ளதாகக் கூறியுள்ள ஸ்ரீதர் வேம்பு, ஐடி துறைகளில் தற்போது வேலைவாய்ப்பு மிகவும் மோசமாக உள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு நோக்கி அனைத்து நிறுவனங்களும் பயணித்து வருகின்றன. பல்வேறு நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவால் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலையிழக்கும் சூழல் நிலவி வருகிறது. இதனை ஸ்ரீதர் வேம்புவும் சுட்டிக்காட்டியுள்ளார். செயற்கை நுண்ணறிவு காரணமாக, பல நிறுவனங்களில் புதிய ஊழியர்களை பணியமர்த்தும் சூழல் தற்போது இல்லை எனவும் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
எனவே, வழக்கமான பட்ட படிப்புகளுக்கு மாற்றாக, தொழில் சார்ந்து புதிய பயிற்சிகளை அளிக்கும் மையங்களை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். அந்த பயிற்சி மையங்கள் மூலம் மாணவர்கள் பெறும் அறிவை, தொழில் நிறுவனங்கள் அங்கீகரிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
கல்விமுறை குறித்த ஸ்ரீதர் வேம்புவின் இந்த கருத்துக்கள், கல்வியாளர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. இதுவரை இருந்து வந்த கல்விமுறைக்கு மாற்றாக, மாற்றுக் கல்வி வழங்குவது குறித்து பரிசீலிக்கவும் அவரது கருத்துகள் வழிவகுத்துள்ளது.