தமிழ்நாட்டில் குற்றவாளிகள் சுதந்திரமாகச் சுற்றித் திரியும் திமுக ஆட்சியில், நமது தேசத்தின் பாதுகாவலர்கள் உதவிக்காக மன்றாடும் நிலை இருப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் சி.ஆர்.பி.எஃப் ஜவான் ஒருவர், வேலூர் மாவட்டம், காட்பாடி அருகேயுள்ள தனது வீட்டில் நடந்த திருட்டு சம்பவம் தொடர்பாக, கண்ணீர் மல்க பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.
அதில் கடந்த ஜூலை 24-ம் தேதி தனது வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், தனது திருமணத்திற்காகப் பெற்றோர் சேர்த்து வைத்திருந்த 22.5 சவரன் நகைகள், 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் பட்டுச் சேலைகளைத் திருடிச் சென்றதாகத் தெரிவித்திருந்தார்.
மேலும், திருட்டு வழக்கு தொடர்பாகத் தாமதமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், மேல் நடவடிக்கை எடுக்காமல் போலீசார் காலம் தாழ்த்தி வருவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். பல வழிகளில் முயற்சித்தும் யாரும் தங்கள் குடும்பத்திற்கு உதவ முன்வரவில்லை எனத் தெரிவித்த அவர், தலையில் கைவைத்துக் கதறி அழுதபடி வீடியோ வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், அந்த காணொளியைத் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் குற்றவாளிகள் சுதந்திரமாகச் சுற்றித் திரியும் திமுக ஆட்சியில், நமது தேசத்தின் பாதுகாவலர்கள் உதவிக்காக மன்றாடும் நிலை இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், சீருடையில் இருக்கும் பெண் இணையத்தில் நீதிக்காகக் கெஞ்ச வைக்கும் அளவிற்கு எந்த வகையான நிர்வாகம் கட்டாயப்படுத்துகிறது என்றும் முதலமைச்சர் ஸ்டாலினைக் குறிப்பிட்டு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.