பாகிஸ்தானில் தங்கியுள்ள சுமார் 10 லட்சம் ஆப்கானிஸ்தான் அகதிகள் வெளியேற அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் பல ஆண்டுகளாக நிலவி வரும் உள்நாட்டுக் குழப்பம், போர் உள்ளிட்ட காரணங்களால் அந்நாட்டு மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக வசித்து வருகின்றனர்.
குறிப்பாக, 2021ம் ஆண்டு தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த சமயத்தில் லட்சக்கணக்கான மக்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறினர். ஈரானில் மட்டும் 40 லட்சம் ஆப்கானியர்கள் அகதிகளாக வசித்து வந்த நிலையில், அவர்களில் பலரை வெளியேறும்படி ஈரான் அரசு அண்மையில் உத்தரவிட்டது.
தற்போது பாகிஸ்தான் அரசும் அதே முடிவை எடுத்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள சுமார் 10 லட்சம் ஆப்கான் அகதிகள் உடனடியாக வெளியேற வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அகதிகள் அந்தஸ்தையும் ரத்து செய்துள்ளது. இதில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த தொழிலதிபர்களும் அடக்கம். இதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.