பாஜக மூத்த தலைவரும், எம்எல்ஏவுமான எம்.ஆர். காந்தியை கொல்ல முயன்றது தொடர்பான வழக்கில், பயங்கரவாத செயலுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள செய்யது அலி நவாஸ், நாகர்கோவில் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
கடந்த 2013-ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்ட பாஜக மூத்த தலைவரான எம்.ஆர்.காந்தி நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது, சிலர் அவரை வெட்டிக் கொல்ல முயன்றனர்.
இதுதொடர்பான வழக்கு நாகர்கோவில் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், கடந்த 2019-ல் இடலாக்குடியைச் சேர்ந்த செய்யது அலி நவாஸ் உள்பட 5 பேர் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இதுதொடர்பான மேல்முறையீட்டு வழக்கு நாகர்கோவில் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது பயங்கரவாத செயலுக்காக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செய்யது அலி நவாஸ், பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவரிடம் விசாரணை நடத்திய நீதிமன்றம், வழக்கைச் செப்டம்பர் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.