லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. ஆட்டத்தின் கடைசி நாளில் இங்கிலாந்து வெற்றி பெறவே அதிக வாய்ப்பு என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், தனது மிரட்டல் வேகப்பந்து வீச்சால் இந்திய அணிக்கு முகமது சிராஜ் வெற்றியைத் தேடித் தந்துள்ளார்.
இந்திய அணிக்கு எதிராக ஓவல் மைதானத்தில் நடந்த ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் கடைசி நாளில், வெறும் 35 ரன்கள் மட்டுமே எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது இங்கிலாந்து அணி. முன்னணி பேட்ஸ்மேன்கள் ஏற்கனவே ஆட்டமிழந்த நிலையில், இங்கிலாந்து பவுலர்கள் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வார்கள் என அந்த நாட்டு ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் தான், இந்திய அணி அந்த வெற்றியைத் தட்டிப் பறித்து தன்வசப்படுத்தி இருக்கிறது.
ஓவல் டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் இந்திய பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 3 விக்கெட்களையும், பிரஷீத் கிருஷ்ணா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி இங்கிலாந்து அணியை 367 ரன்களில் ஆல் அவுட் ஆக்கினர். இதன் மூலம் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது.
போட்டியின் 4வது நாளில் ஜோ ரூட் மற்றும் ஹேரி ப்ரூக் ஆகியோர் சதம் விளாசியது இந்திய அணியின் பந்து வீச்சு வலிமையைக் கேள்விக்கு உள்ளாக்கிய நிலையில், 5வது நாளில் ஆடுகளம் சாதகமாக இருந்ததால், இந்தியப் பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்து அணியிடம் இருந்து வெற்றியை தட்டிப் பறித்தனர். ஓவல் மைதானத்தில் இந்தியப் பந்து வீச்சாளர்கள் நிகழ்த்திய மாயாஜாலம் பற்றி கேப்டன் ஷுப்மன் கில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய போது, நமது அணிக்குக் கிடைத்தது போன்ற பவுலர்கள் உலகின் பெரும்பாலான அணிகளில் இல்லை எனத் தெரிவித்தார்.
இரண்டாவது இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய சிராஜ், ஓவல் டெஸ்ட் போட்டியில் மொத்தம் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சிராஜுக்கு உறுதுணையாக பிரசித் கிருஷ்ணாவும் இரு இன்னிங்ஸிலும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஓவல் டெஸ்ட் போட்டியின் முதல் 4 நாட்கள் இங்கிலாந்து அணிக்குச் சாதகமாக இருந்தாலும், கடைசி நாளின் ஒரு மணி நேரத்திற்குள் இந்திய அணி, போட்டியின் போக்கையே மாற்றும் வகையில் செயல்பட்டு, வெற்றியை ருசித்தது. இந்த வெற்றியை இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் கிரிக்கெட் வீரர்களிடமும் ஏகோபித்த பாராட்டை பெற்று வருகிறது.
இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லும், இங்கிலாந்து அணி வீரர் ஹாரி ப்ரூக்கும் தொடர் நாயகன் விருதினை பெற்றனர். அதற்கான காரணம் என்னவெனில், இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் தொடர்களில் நீண்ட கால பாரம்பரியமாகத் தொடர் நாயகன் விருது இரு அணிகளின் வீரருக்கும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.