சென்னையின் பிரதான பகுதிகளில் ஒன்றான வேளச்சேரிக்கென தனியாகப் பேருந்து நிலையம் இல்லாததது அப்பகுதி மக்களிடையே சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. பேருந்து நிலையம் அமைக்க ஒதுக்கிய இடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவருவதாகப் புகார் எழுந்துள்ளது.
உயர்தர சிகிச்சைக்கான மருத்துவமனைகள், கார்ப்பரேட் ஐடி கம்பெனிகள், முன்னணி கட்டுமான நிறுவனங்கள் எனப் பலரும் சங்கமிக்கும் சென்னையின் ஹை கிளாஸ் சிட்டியாகத் திகழ்கிறது இந்த வேளச்சேரி. அத்தகைய வேளச்சேரிக்கு என பிரத்யேக ரயில் நிலையம் இருக்கும் நிலையில், தற்போது வரை அதற்கென தனி பேருந்து நிலையம் இல்லாதது அப்பகுதி மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது
வேளச்சேரியில் பேருந்து நிலையம் அமைப்பதற்காக கைவேலி என்ற பகுதியில் கடந்த 1999 ஆம் ஆண்டு தமிழக அரசின் மூலமாகவே இடம் ஒதுக்கப்பட்டது. அங்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் ரயில் நிலையம், பணிமனை, தண்டவாளம் ஆகியவை போக சுமார் 22 ஏக்கர் நிலம் தற்போதுவரை காலியாகவே உள்ளது. தினசரி காலையில் விளையாட்டு மைதானமாகவும், இரவு நேரங்களில் சட்டவிரோத சம்பவங்கள் நடைபெறும் மைதானமாகவும் இந்த இடம் மாறிவருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
பேருந்து நிலையம் அமைப்பதற்கான நிலம் ஒதுக்கியும் அதற்கான எந்தவித பணிகளும் நடைபெறாமல் இருப்பதால், ரயில் நிலையத்தில் இறங்கும் போது விஜயநகர் பேருந்து நிலையத்தை நாட வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கின்றனர் பயணிகள்.
மந்தைவெளி, திருவான்மியூர், வடபழனி உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்திருக்கும் நிலையில், வேளச்சேரியில் மட்டும் பேருந்து நிலையம் என்பது அப்பகுதி மக்கள் மத்தியில் கானல் நீராகவே காட்சியளிக்கிறது.
நகரமயமாதலின் உச்சத்தை எட்டும் வகையில் வேளச்சேரி பெரிய வளர்ச்சியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் வேளையில், அப்பகுதி மக்களின் அத்தியாவசியத் தேவைகளின் ஒன்றான பேருந்து நிலையத்தை அமைத்து அதனைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.